×

பஜ்ஜி நன்றாக இல்லை என கூறிய வாலிபருக்கு கத்திக்குத்து: பீகார் மாஸ்டர் கைது

தண்டையார்பேட்டை: பூக்கடை கோவிந்தப்பன் தெருவில் உள்ள கடையில் பஜ்ஜி நன்றாக இல்லை எனக் கூறியதால் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. புகாரின்பேரில் பீகாரை சேர்ந்த பஜ்ஜி மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி, எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானமணி (33). எலக்ட்ரிக்கல் கடையில்  வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பூக்கடை, கோவிந்தப்பன் தெருவில் உள்ள டீக்கடையில் தனது நண்பர் சீனிவாசனுடன் பஜ்ஜி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது பஜ்ஜி நன்றாக இல்லை என கடைக்காரரிடம் ஞானமணி புகார் கூறினார்.

மேலும் அங்கு பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டி கொண்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மாஸ்டர் அருள் (21) என்பவரை ஞானமணி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த அருள் தனது கையில் வைத்திருந்த கத்தியால் ஞானமணியின் வலது கை, தலையில் வேகமாக குத்தினார்.இதில் ஞானமணி படுகாயம் அடைந்து, ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். தகவலறிந்து பூக்கடை இன்ஸ்பெக்டர் சித்தார்த் தலைமையில் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த ஞானமணியை மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திய பீகாரை சேர்ந்த மாஸ்டர் அருள் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bihar ,master ,
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!