×

அம்பத்தூர் கம்பெனி அதிபர் கொலையில் 2 வாலிபர்கள் பீகாரில் சிக்கினர்: காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

அம்பத்தூர்: அம்பத்தூர் கம்பெனி அதிபர் கொலையில் பீகாரில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வியாசர்பாடி, பெரியார் நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (27). அம்பத்தூர் நடேசன் நகரில் கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 22ம் தேதி பிரபாகரன் கம்பெனியில் இருந்தபோது அவரது தந்தை ஆனந்தன் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது பிரபாகரன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.    இதனால் அதிர்ச்சி அடைந்த  ஆனந்தன் கம்பெனிக்கு வந்து பார்த்தபோது பிரபாகரன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் கம்பெனியில் இருந்த பணம் மற்றும் செல்போன் திருடு போய் இருந்தது. புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது கம்பெனியில் வேலை பார்த்த பீகாரை சேர்ந்த ஜிஜேந்தர் (19), ரோஷன் (19) ஆகியோர் மாயமானது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் இருவரும் 22ம் தேதி இரவு 9.15 மணியளவில் மேற்கு வங்கம் செல்லும் ரயில் மூலம் பீகாருக்கு தப்பியது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் பீகாருக்கு விரைந்தனர். ஆனால் போலீஸ் வந்ததை அறிந்து இருவரும் பதுங்கி விட்டனர். எனவே அவர்கள் இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் பீகாரில் முகாமிட்டு தேடி வந்தனர்.

இந்நிலையில் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்திற்கு  உட்பட்ட கொளப்பா பகுதியில் ஜிஜேந்தர், ரோஷன் ஆகிய இருவரும் பதுங்கி இருப்பது தெரிந்தது. எனவே தனிப்படை போலீசார் உள்ளூர் போலீசார் உதவியுடன் இருவரையும் நேற்று மாலை பிடித்தனர்.
பின்னர், இருவரையும் கொளப்பா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையறிந்த அவர்களது உறவினர்கள் 200க்கு மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, ‘‘இருவரையும் சென்னை கொண்டு செல்லக்கூடாது’’ என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து பீகார் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம், ‘‘இருவரையும் அடிக்க கூடாது. உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’’ என கோரிக்கை வைத்தனர். இதை போலீசார் ஏற்றுக்கொண்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர்,  தனிப்படை போலீசார் இருவரையும் பாட்னா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும், கொலையாளிகள் இருவரையும் இன்று  (28ம் தேதி) இரவு சென்னை கொண்டு வருவார்கள் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Bihar Bihar ,
× RELATED பீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி