×

உத்தமபாளையம் பேரூராட்சியில் வார்டுகளை பிரித்ததில் குழப்பம்

உத்தமபாளையம், நவ.27: உத்தமபாளையம் பேரூராட்சியில் வார்டுகளை பிரித்ததில் ஏற்பட்ட குழப்பத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வார்டுகள் சீரமைப்பு என்ற பெயரில் ஏற்கனவே இருந்த வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். குறிப்பாக உத்தமபாளையம் இந்திராநகர் முன்பு 6வது வார்டாக இருந்தது. இப்போது 12வது வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதில் யாதவர் தெரு, நாடார் மாரியம்மன் கோவில் தெரு, கல்லறை தெரு என சேர்ந்துள்ளது. 8வது வார்டில் இருந்த கோட்டைமேடு தெருவின் பெரும்பாலான இடங்கள் 11வது வார்டாக்கி, அதனை பழைய கனரா வங்கி மற்றும் அதற்கும் மேல் பிரித்துள்ளனர். முன்பு 1வது வார்டாக இருந்த ஆர்.சி.வடக்கு தெரு இப்போது 6வது வார்டாகி உள்ளது. 10வது வார்டில் இருந்த புதூர் இப்போது 1வது வார்டாக மாறி பெரும் குழப்பமாகி உள்ளது.

பேரூராட்சியிலேயே மிகப்பெரிய வார்டாக கருதப்பட்ட 4வது வார்டில் முன்பு 4 ஆயிரம் வாக்குகள் வரை இருந்தன. இப்போது அதனையே மூன்றாக பிரித்து வார்டுகளை வரையறை செய்துள்ளனர். இதேபோல் 17வது வார்டாக இருந்த களிமேடு இப்போது 18வது வார்டாகி உள்ளது. இப்படி வார்டுகள் வரையறை என்ற பெயரில் பல குழப்பங்கள் உள்ளதால் பெரிய அரசியல் கட்சிகள் தவித்து வருகின்றன. எந்த வேட்பாளரும், உறுதியிட்டு வெற்றி பெற முடியும். இது சம்பந்தப்பட்ட கட்சியின் கோட்டை என கூற முடியாத அளவிற்கு பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வார்டுகள் பிரித்ததில் உள்ள குழப்பம் உத்தமபாளையம் மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. காரணம், பல வார்டுகளில் மனைவி ஒரு வார்டிலும், கணவன் மற்றொரு வார்டிலும், பிள்ளைகள் மற்றொரு வார்டிலும் வருகின்றனர். ஒரே குடும்ப ஓட்டுக்களும் சிதறடிக்கப்பட்டுள்ளது.

Tags : Uthamapalayam ,
× RELATED பெண் தற்கொலை