×

மாநில தலைமை தேர்தல் ஆணையர் அறிவுரை பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு


கோவை, நவ. 27:  ‘‘உள்ளாட்சி தேர்தலின்போது பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை வெப் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்’’ என மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார். கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வுக் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:தமிழக மாநில தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் மிக தெளிவாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நன்றாக படித்து தெரிந்து கொள்ளவேண்டும். தமிழகம் முழுவதும்  ஊரக பகுதிகளில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 450 வார்டுகளுக்கும், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் தலைவர்களுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. நகர்ப்புறத்தில் 12 ஆயிரத்து 820 வார்டு உறுப்பினர்களும், 15 மாநகராட்சிகள், 121 நகராட்சியில் உள்ள வார்டுகளில் வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு தென் மண்டலத்தில் முதன்முறையாக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கலெக்டர்களுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் கோவையில் இன்று (நேற்று) பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சிகளை நல்ல முறையில் அலுவலர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். தேர்தல்  பணியில் ஈடுபடும்போது எந்த ஒரு சந்தேகங்களுக்கும் இடம் அளிக்காத வகையில் நேர்மையான முறையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லும் சாலைகளிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்று கண்காணிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை வெப் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்.  இவ்வாறு பழனிசாமி பேசினார்.
இது குறித்து மாநில தேர்தல் ஆணையாளர் பழனிச்சாமி கூறியதாவது:நகர்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் பணிக்காக தயார் நிலையில் உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக நான்கு மாவட்டங்களில் 10,085 வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்காக  893 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு  893 மண்டல அலுவலர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். அதேபோல், 103 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது. வாக்குப்பெட்டிகளை பொறுத்தவரையில் நான்கு மாவட்டங்களுக்கும் மொத்தமாக 18,103 வாக்குப்பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன.  இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Tags : State Chief Election Commissioner ,Web Camera ,
× RELATED ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதற்றம் நிறைந்த 378 பூத்களில் வெப் கேமரா