×

பழநி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பழநி, நவ. 26: தினகரன் செய்தி எதிரொலியாக பழநி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு கார்த்திகை மாதம் துவங்கியதில் இருந்து ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகளவு இருந்து வருகிறது. தொடர்ந்து தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் கோடை விடுமுறை என மே மாதம் வரை பக்தர்கள் வருகை இருந்து கொண்டே இருக்கும். இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக கிரிவீதி, சன்னதி வீதி, ஐய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதி மற்றும் இடும்பன் இட்டேரி சாலைகளில் 400க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலையோரங்களில் உள்ள கடைக்காரர்கள் தங்களது கடைகளின் எல்லையை ரோடுவரை நீட்டிப்பு செய்து விட்டனர். இவர்களுக்கு அடுத்தபடியாக தள்ளுவண்டி கடைக்காரர்கள் சாலையின் நடுப்பகுதி வரை தங்களது வண்டிகளை நிறுத்தி கொள்கின்றனர். சாலையின் நடுப்பகுதியில் வெளிமாநில வியாபாரிகள் ஆக்கிரமித்து கொள்கின்றனர். இதனால் பக்தர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பக்தர்களின் எண்ணிக்கையை விட வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நேற்று கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சிலரது பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டன. பலரும் தங்களது ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொண்டனர். இதனால் சாலைகளில் விசாலமடைந்து பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்ல முடிந்தது. சீசன் நேரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதும், அதிகாரிகள் ஆசியுடன் மீண்டும் அன்று மாலையே ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்பு விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி கடைக்காரர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித்தர வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாவண்ணம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மீண்டும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : evacuation ,foothills ,
× RELATED முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து...