×

முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: மதுராந்தகம் அருகே பரபரப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில், கடந்த சில நாட்களாக  குடிநீர் முறையாக வினியோகவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், இது குறித்து பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை தொடர்ந்து, முறையான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் காலி குடங்களுடன் அச்சிறுப்பாக்கம் - எலப்பாக்கம் நெடுஞ்சாலையில் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த பல வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த, அச்சிறுப்பாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர்,  அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : evacuation ,civilians , Drinking water, condemning, empty pitcher, civilians, road stir
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை