×

காரிமங்கலம் பகுதியில் துவரை பயிர்களில் பூச்சி புழுக்கள் தாக்கம்

காரிமங்கலம், நவ.27: காரிமங்கலம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள துவரை செடிகளில் பூச்சி, புழுக்கள் தாக்கி சேதம் ஏற்பட்டுள்ளதால், வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான அடிலம், எலுமிச்சனஅள்ளி, பொம்மஅள்ளி மற்றும் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி, கரகூர், பஞ்சப்பள்ளி, ரெட்டியூர், காட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் துவரை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த துவரை செடிகளை சில வகை புழு, பூச்சிகள் தாக்கி விவசாயிகளுக்கு கடும் பொருளாதார சேதத்தை விளைவிக்கின்றன. பூச்சிகளின் தாக்குதல் துவரையின் இளம் பருவம் முதல் முதிர்பருவம் வரை உள்ளது. இவற்றில் குறிப்பாக, சாறு உண்ணும் பூச்சிகளான தத்துப்பூச்சி, எம்போஸ்கா கெர்ரி, காய் உண்ணும் பூச்சிகளான புள்ளிகாய் புழு, மருக்கா விட்ரேட்டா உள்ளிட்ட பல்வேறு பூச்சி இனங்கள் உள்ளது.

இவை குறிப்பிட்ட பருவங்களில், அதிக அளவில காணப்படுகின்றன. ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள பருவ காலங்களில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. காய் உண்ணும் பூச்சியான ஹெலிக்கோவெர்பா, ஆர்மிஜெரா என்ற பூச்சியானது பூக்கும் பருவம் முதல் காய் முதிர்ச்சியடையும் பருவம் வரையிலும் காணப்படும். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலநிலை இந்த பூச்சிக்கு ஏற்றதாக இருப்பதால், தற்போது இவற்றின் பாதிப்பும் அதிகமாக உள்ளது. வேளாண்மை துறை அதிகாரிகள் கிராம பகுதிகளுக்கு வருவதில்லை எனவும் இதனால் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாமல், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே துவரை பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ேவளாண்மை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்க ேவண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்