×

பள்ளிகளுக்கு அருகில் நின்று இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை: சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

திருவள்ளூர், நவ. 27:  திருவள்ளூர் ரயில் நிலையம், பஸ் நிலையம், வேப்பம்பட்டு, வெள்ளவேடு மற்றும் சுற்றுப்புற பகுதி பள்ளிகளுக்கு அருகில் நின்று கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது. இதனால், மாவட்டத்தில் ஆங்காங்கே கொலை சம்பவங்களும் அரங்கேறியது. இதுகுறித்த புகார்கள் மாவட்ட எஸ்.பி., அரவிந்தனுக்கு வந்தன. இதையடுத்து, கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட போலீசார் நேற்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருவள்ளூர் ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த மூவரை டவுன் எஸ்.ஐ., சக்திவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெரியகுப்பம் சுகுமார்(18), முரளி(38), கடம்பத்தூர் நாகராஜ்(20) என தெரிந்தது.

இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த இரண்டரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மூவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பொன்னேரி: திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின்படி, பொன்னேரி ஏஎஸ்பி குமார் ரெட்டி மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் (பொறுப்பு), உதவி ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்தனர். விசாரணையில், பொன்னேரி தேவமாநகர் அண்ணா தெருவை சேர்ந்த வசந்த் (26).

ஆந்திராவில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் எல்எல்பி படிக்கிறார். கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வரும்போது ஒரு கஞ்சா வாங்கி வந்து, தனது வீட்டில் வைத்து சிறு பொட்டலங்களாக பிரித்து பொன்னேரி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து, வசந்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வசந்தை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : school ,law student ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா