×

தோட்டக்கலைத்துறை அதிகாரி தகவல் நெற்பயிரில் பனிகாலத்தில் பரவும் குலைநோயை கட்டுப்படுத்த மேலாண்மை தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டும்

வலங்கைமான்,நவ.27: நெல்லில் பனிகாலத்தில் பரவும் குலை நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை தொழில் நுட்பத்தை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் விவசாயிகளை அறிவுறுத்தி உள்ளார்.தற்போது நிலவிவரும் மேகமூட்டத்தின் காரணமாக காற்றின் ஈரப்பதம் 90 சதவீதம் முதல் 97 சதவீதம் உள்ளதாலும், நெருக்கி நடுதல் மற்றும் அதிகமாக தழைச்சத்து உரம் இடுதல் போன்ற காரணங்களால் உருவாக கூடிய குலை நோய் மற்றும் இலைக்கு கண் நோய் தாக்கும் வாய்ப்புள்ளது.அதன் அறிகுறிகள் நெற்பயிர் இலையின் மேற்புறத்தில் வெண்மை நிறத்திலும் சாம்பல் நிறமை பகுதியுடன் காய்ந்த ஒரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும்.இந்த நோய் தாக்குதலின் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். நெற்பயிரின் அனைத்து பகுதிகளான தண்டு, கழுத்தப்பகுதி மற்றும் நெற்கதிர் முழுவதும் தாக்கப்பட்டிருக்கும் இதனால் நெற்கதிரின் கழுத்தப்பகுதி உடைந்து மகசூலில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நோயானது காற்றின் மூலமும் பாதிக்கப்பட்ட விதைகள் மூலமும் களைகளின் மூலமும் பரவுகிறது.இந்நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை தொழில் நுட்பத்தை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். தழைச்சத்து உரமான யூரியா மற்றும் அம்மோனியா சல்பேட் உரங்களை அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும்.வரப்பில் உள்ள களையை அகற்றுவது நல்லது, தாமதமாக நடுவதை தவிர்க்க வேண்டும்.

நெல் விதைக்கும் முன்பு சூடோமோனாஸ் பவுடருடன் உலர் விதை நேர்த்தி செய்யலாம், சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் நாற்றுகளின் வேர்பாகம் நன்கு நனையுமாறு 15-30 நிமிடங்கள் வைத்திருந்து நடவு செய்யலாம், நடவு செய்த 45 நாட்களுக்கு பிறகு சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பவுடரை 200 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இந்நோயின் தீவிரம் அதிகம் இருப்பின் ஏதாவது ஒரு பூஞ்சாண மருந்தில் ஏதாவது ஒன்றை அதாவது கார்பன்டசிம் 50 எஸ்சி ஒரு ஏக்கருக்கு 200 கிராம் அல்லது டிரைசைலசோல் 25 எஸ்சி ஒரு ஏக்கருக்கு 200 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் தெளித்து நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags : Horticulture Officer ,
× RELATED சேரன்மகாதேவியில் பரபரப்பு...