×

சேரன்மகாதேவியில் பரபரப்பு மானியத்தில் சலுகைகள் பெற்று தருவதாக ரூ.8.5 லட்சம் மோசடி

*உதவி தோட்டக்கலை அலுவலர் கைது

வீரவநல்லூர் : சேரன்மகாதேவியில் மானியத்தில் சலுகைகள் பெற்று தருவதாக கூறி ரூ.8.5 லட்சம் மோசடி செய்த உதவி தோட்டக்கலை அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த அடைச்சாணி கிராமம், தெற்குத்தெருவை சேர்ந்தவர் பேச்சி மகன் பேச்சிமுத்து (38). இவர், சேரன்மகாதேவி தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் உதவி தொடக்க அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஜூன் 2022 முதல் டிச. 2022 வரை சேரன்மகாதேவியில் பணிபுரிந்த காலத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் மானிய விலையில் டிராக்டர், வீடு, போர்வெல் மற்றும் தையல் மெஷின் பெற்றுத் தருவதாக கூறி சேரன்மகாதேவி ராமசாமி கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சுப்புலெட்சுமி (42) என்பவரிடம் ரூ.5 லட்சமும், சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த லெட்சுமி, முத்தையா, முனியம்மாள், சுமதி, ராமலெட்சுமி, மகாராஜன் ஆகியோரிடம் ரூ.3.5 லட்சம் என மொத்தம் ரூ.8.5 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் மானிய விலையில் சலுகைகளை பெற்றுத்தராமல் பேச்சிமுத்து இழுத்தடிக்கவே பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதையடுத்து பேச்சிமுத்து பணம் கொடுத்தவர்களை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் பேச்சிமுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் சேக் அப்துல் காதர் நேற்று பேச்சிமுத்துவை கைது செய்து பாளை. சிறையிலடைத்தார். கைதுசெய்யப்பட்ட பேச்சிமுத்து கடந்த ஆண்டு பாளையங்கோட்டையில் பணிபுரிந்த போது அங்கும் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுதொடர்பாக பேச்சிமுத்து தற்போது சஸ்பெண்ட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சேரன்மகாதேவியில் பரபரப்பு மானியத்தில் சலுகைகள் பெற்று தருவதாக ரூ.8.5 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : serenmagadevi ,Assistant Horticulture Officer ,Veeravanallur ,Dinakaran ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி