×

காலமுறை ஊதியம் வழங்க கேட்டு நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் மறியல் 170 பேர் கைது

நாகர்கோவில், நவ.27:   நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 170 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தில் 37 ஆண்டுகாலம் ஒரே துறையில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அரசு மற்றும் சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பள்ளி சத்துணவு மையங்களை மூடுவதை தவிர்க்க வேண்டும், சமையல் எரிவாயுவை அரசே வழங்க வேண்டும், உணவூட்டு செலவு மானியத்தை விலைவாசிக்கேற்ப உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜெபமணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமச்சந்திரன், மரிய சார்லஸ், அனுசுயா, கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்பாக்கியதீபா வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கனகராஜ் தொடங்கி வைத்து பேசினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் ராஜ்குமார் உட்பட நிர்வாகிகள் பேசினர். பின்னர் கோஷங்களை எழுப்பிய வண்ணம் சாலை மறியலில் ஈடுபட்ட ஐந்து ஆண்கள் உட்பட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.


Tags : nutrient workers ,
× RELATED நாகை மாவட்டத்தில் காலமுறை ஊதியம்...