×

க.பரமத்தி கார்வழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதியின்றி நோயாளிகள் கடும் அவதி விலைக்கு வாங்கும் அவலம்

க.பரமத்தி, நவ. 26: க.பரமத்தி அருகே கார்வழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான குடிநீர் வசதி இல்லாததால் சிகிச்சைக்கு வருவோர் பணம் கொடுத்து குடிநீர் கேன்கள் பெற்று வந்து பருகும் அவல நிலையை போக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். க.பரமத்தி ஒன்றியத்தில் சின்னதாராபுரத்தை தலைமை இடமாக கொண்டு க.பரமத்தி, புன்னம், காசிபாளையம், கார்வழி, விசுவநாதபுரி, தும்பிவாடி என அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

இதில் கார்வழி ஆரம்ப சுகாதார நிலையம் ஊராட்சியின் மைய பகுதியில் உள்ளதால் பல்வேறு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் நோய்க்கு சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். இங்கு சுற்று பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்க கூடிய அளவிற்கு பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தேடி நம்பி வருகின்றனர்.

ஆனால் இங்கு போதுமான அளவு தண்ணீர் வசதியும் குடிநீர் வசதியும் இல்லை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளிகள் பொதுமக்கள் குறை கூறுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிக்கப்பட்டதாகவும் ஆனால் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் நோயாளிகளுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருவதாக நோயாளிகள் புலம்பி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில் கார்வழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமாக குடிநீர் வசதி இல்லாததால் இங்கு தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க இளம்வயதினர் வாகனங்களில் சென்று தண்ணீர் கொண்டு வந்து தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

வயதானவர்கள் நோயாளிகள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் வசதி உள்ளவர்கள் தனியார் மருத்துவம் தேடி வேளியே சென்று விடுகின்றனர். வறுமைக்கோட்டின் கீழ் வசிப்போர் மட்டுமே பிரசவத்திற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடும் சூழல் உள்ளது. இங்கு போதிய குடிநீர் வசதி இல்லை. எனவே நோயாளிகளின் குடிநீர் தேவையை நிறைவு செய்து கொடுக்க அரசும், ஊராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Baramati Primary Health Center ,
× RELATED பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை தேவை