×

குண்டும், குழியுமாக மாறிய தையாகுப்பம் -சி.முட்லூர் சாலை

புவனகிரி, நவ. 26: சிதம்பரத்தில் இருந்து சுற்று வட்டார கிராமங்கள் வழியாக சி.முட்லூர் கிராமத்திற்கு சாலை செல்கிறது. இதில் மினி பேருந்து சென்று வருகிறது. இந்த சாலை வழியாக சி.முட்லூரில் உள்ள 2 கல்லூரிகள், பள்ளிகள், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்று வட்டார கிராம மக்கள் சென்று வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் உள்ள தையாகுப்பம் கிராமத்தில் இருந்து சி.முட்லூர் கிராமம் வரை உள்ள தார்சாலை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகவும் பழுதடைந்துள்ளது. சாலைகளில் இருந்த தார் காணாமல்போய், ஜல்லிகள் பெயர்ந்து கரடுமுரடான செம்மண் சாலையாக மாறியுள்ளது. சில இடங்களில் சாலையா அல்லது வயல்வெளியா என்பதே தெரியாத அளவிற்கு சாலைகள் காணாமல் போய்விட்டன. பல இடங்களில் சமீபத்தில் பெய்த மழையால் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. கரடுமுரடான இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதும், பழுதடைவதும் தொடர் கதையாகி வருகிறது. சாலை சரியாக இல்லாததால் இந்த வழித்தடத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சாலையை பயன்படுத்தும் சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thayaguppam - C. Mudlur Road ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்