×

சூளகிரி அருகே வழித்தடத்தில் வேலி அமைத்தவர் மீது புகார்

கிருஷ்ணகிரி, நவ.26: சூளகிரி அருகே, புறம்போக்கு வழியில் முள்வேலி அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். சூளகிரி தாலுகா பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சி, பெப்பாலப்பள்ளி திராடி கிராம மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பெப்பாலப்பள்ளி திராடி கிராமத்தில், பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர், 80 ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கியுள்ளார். அவர் தனக்கு சொந்தமான பட்டா நிலத்திலும், காருபாலா ஏரி புறம்போக்கு நிலத்திலும் சட்ட விரோதமாக மணல் எடுத்து, விற்பனை செய்து வருகிறார்.

இதனால் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயத்திற்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றி வருகிறது. மேலும், விவசாய நிலங்களுக்கு மக்கள் பல ஆண்டுகளாக சென்று வந்த வழித்தடத்தை முள்வேலி போட்டு ஆக்கிரமித்துள்ளதால், விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பர்கூர் தாலுகா தம்மகவுண்டனூர் அருகே, ஆலே சுன்னத்  ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பது:

தம்மகவுண்டனூர், தபால்மேடு,  கல்லாத்துப்பட்டி, பையனூர், அத்திமரத்துப்பள்ளம், அங்கிநாயனப்பள்ளி ஆகிய  பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், எங்களுக்கு  தனியாக மயானம் இல்லை. எங்கள் பகுதிக்கு மயானத்திற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக  கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு தனியாக மயானம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு  அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sulagiri ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி