ஊத்துக்கோட்டை, நவ. 26: பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் அருகே கரிகலவாக்கம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருகாத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள அம்மனை கரிகலவாக்கம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராம மக்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வருகிறார்கள்.கடந்த 2004ம் ஆண்டு கிராம மக்கள் இக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்து மண்டல பூஜை நடத்தினர். இந்த கருகாத்தம்மனை அக்கிராம மக்கள் சிலர் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயில் பூசாரி கோயில் நடையை சாத்தி பூட்டி விட்டு சென்றார். பின்னர், நேற்று காலை வழக்கம் போல் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் சிலர் கோபுர கலசத்தை வணங்கியபோது, 3 கலசத்தில் நடுவில் இருந்த கலசம் மட்டும் காணவில்லை. இதைகண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து பூசாரியிடம் தெரிவித்தனர். இதை பூசாரி, கிராம பெரியவர்களிடம் தெரிவித்தார். தகவலறிந்த வெங்கல் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று கலசம் திருடு போனது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால், கரிகலவாக்கம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.