×

திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் தொடங்கும் இடத்தில் ரிப்ளக்டர் ஸ்டிக்கர் வைப்பதில் அலட்சியம்

திருவள்ளூர், நவ. 26: திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில், சென்டர்மீடியன் துவங்கும் இடத்தில் எச்சரிக்கை பலகையோ அல்லது  ரிப்ளக்டர் ஸ்டிக்கரோ வைக்காததால்  கனரக வாகனங்கள் தினமும் விபத்துகளை சந்தித்து வருகின்றன. உயிர்பலி ஏற்படுமுன் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூரில்  மணவாளநகர் முதல் டோல்கேட் வரை சென்டர்மீடியனை நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர். இச்சாலை வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் தொழிற்சாலைகளுக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான கனரக வாகனங்களும் சென்று வருகிறது.  இதில், டோல்கேட் பகுதியிலும், பூண்டி செல்லும் சாலையிலும் சென்டர்மீடியன் துவங்கும் இடத்தில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. மேலும் ரிப்ளக்டரும் இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் தினமும்  மேற்கண்ட இடங்களில் தினமும் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், சென்டர்மீடியனும் சேதமாகி வருகிறது. பல உயிரிழப்புகளும் ஏற்படுவதோடு, வாகனங்களும் சேதமாகிறது.

இந்நிலையில், சென்டர்மீடியன் துவங்கும் இடத்தில் போலீசார் தற்போது பேரிகார்டு வைத்துள்ளனர். இருந்தாலும். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் வாய்ப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. சென்டர்மீடியன் துவங்கும் இடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு இல்லாததால், இதுவரை 10க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்டர்மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘சென்டர் மீடியனில் ‘ரிப்ளக்டர்’ ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். விபத்து பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணமாக அமைகிறது. எனவே, வாகன விபத்துக்களை தடுக்கும் வகையில் சென்டர் மீடியன் தொடங்கும் இடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையோ அல்லது ரிப்ளக்டர் ஸ்டிக்கரோ வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : opening ,highway ,Thiruvallur ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...