×

டெங்கு காய்ச்சலில் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

கோவை, நவ. 26: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாமினை  மாவட்ட கலெக்டர் ராஜாமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குநர் பானுமதி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம்  மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்  உட்பட பலர் கலந்து  கொண்டனர்.  இப்பேரணியானது கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி வ.உ.சி. பூங்கா வரை சென்று நிறைவு பெற்றது.பின்னர் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்ததாவது:   டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது. நிலவேம்பு கசாயம் அருந்தும்போது அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதில் நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிப்பதால் நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.     அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நேரு பூங்காவில் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

நோய் வராமால் தடுக்க ஒவ்வொருவரின் உடல் வன்மைக்கு தகுந்தவாறு மாதத்தில் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை காலை மட்டும் ஐந்து நாட்கள் நிலவேம்பு குடிநீர் அருந்த வேண்டும். காய்ச்சல் வந்தபின் ஒவ்வொரு ஆறு மணிக்கு ஒருமுறை நோயாளியின் வயது மற்றும் உடல் எடைக்கு தக்கவாறு ஒவ்வொரு முறையும் புதிதாக காய்ச்சி  சித்த மருத்துவர் அறிவுரையின்படி அருந்தவேண்டும். நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சம் வேர், சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு மற்றும் பற்படாகம் முதலான 9 மூலிகைகள் சேர்ந்து உள்ளன. இவையன்றி பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பிலைச்சாறும் சித்த மருத்துவரின் அறிவுரைப்படி வழங்கலாம். பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகாமையில் உள்ள இடங்களை கொசுக்கள் இல்லாமல் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளவேண்டும். நிலவேம்பு கசாயம் குறித்து அறிந்து கொண்டு அதனை உரிய முறையில் குடித்து டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும்.  இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.


Tags : public ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்