×

நாகை அக்கரைகுளம் வெட்டுக்குளம் பாலம் சாலையை சீரமைக்க வேண்டும்

நாகை, நவ.26: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன் பி நாயர் தலைமையில் நடந்தது. இதில் வந்த மனுக்கள்:நாகை அக்கரைகுளம் வெட்டுக்குளம் பாலம் சாலையை சீர் செய்யக்கோரி மனு:நாகை அக்கரைகுளம் கீழ்கரையை சேர்ந்த குபேந்திரன் கொடுத்த மனுவில், நாகை நகராட்சி மற்றும் புறநகர் மக்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா நாகை அக்கரைகுளத்தை சீர்செய்ய பலகோடி நிதி ஒதுக்கீடு செய்தார். மக்கள் போராட்டத்தின் பயனாக அக்கரைகுளம் தூர்வாரி கட்டமைப்பு செய்யப்பட்டது. இதனால் நாகையில் பெய்த மழையால் அக்கரைகுளத்தில் நீர் நிரம்பியது. இந்நிலையில் அருகே உள்ள வெட்டுக்குளம் கால்நடைகள் சுகாதார பயன்பாட்டிற்குள்ளது. இது சிதைந்து போய்உள்ளது. எனவே இதை சீர் செய்து ஈமக்கிரிகை செய்ய மண்டபம் அமைத்து தர வேண்டும். அக்கரைகுளம் வடக்கு ரோடு, முக்கூடல் பாலம் உடைந்த நிலையில் உள்ளதை சீர் செய்ய வேண்டும். அக்கரைகுளத்தை சுற்றிவரும் வகையில் சாலை வசதி செய்ய வேண்டும். அட்டை குளத்தெருவில் இருந்து அக்கரைகுளம் வரையிலான சாலையில் உள்ள பள்ளத்தை சீர் செய்ய வேண்டும். அக்கரைகுளம் தென்கிழக்கு வடிகால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அக்கரைகுளம் வெட்டுக்குளம் பாலம் சாலையை சீர் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வேளாங்கண்ணியில் சர்ச்சைக்குரிய இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்:சிவசேனா கட்சி மாநில செயலாளர் சுந்தரவடிவேலு தலைமையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் நீண்ட காலமாக செவ்வாய்கிழமைகள் தோறும் ஆட்டுச்சந்தையும், புத்தர் வழிபாடும் நடைபெற்று வந்தது. இடையில் சில காரணங்களால் ஆட்டுச்சந்தை நிறுத்தப்பட்டது. அப்படியே அந்த இடத்தில் நடந்து வந்த புத்தர் வழிபாடும் நின்று போனது. இது அரசு பதிவேட்டில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த இடம் அப்பகுதியை சேர்ந்த மாற்று ஜாதியினருக்கு சொந்தம் என கோரி உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால் அங்கிருந்த புத்தர் சிலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் உதவியுடன் வருவாய்துறையினர் அகற்றினர். இதை கண்டித்து சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் நடந்தது. இவ்வாறு சர்ச்சைக்குரிய இடம் அரசுபுறம்போக்கு என்று தெரிகிறது.

எனவே அந்த 5 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி சுற்றுலா தலமாக மாற்றி வேளாங்கண்ணி வரும் பயணிகளுக்கு பயன்படும் வகையில் அரசு பயணிகள் தங்கும் விடுதியாக கட்டலாம். அல்லது முன்பு இருந்து போல் ஆட்டுசந்தை நடத்தி பேரூராட்சி வருமானத்தை பெருக்கி கொள்ளலாம். பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் அனைத்து சமுதாய வீடு வழங்க ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.நாகை அக்கரைகுளம் மற்றும் ஜெகநாதபுரம் செல்லும் இணைப்பு பாலத்தை சீர் செய்ய கோரி மனு:சிவசேனா கட்சி மாவட்டத் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் கொடுத்த மனுவில், நாகை நகர எல்லையில் உள்ள அக்கரைகுளம் மற்றும் ஜெகநாதபுரம் செல்லும் இணைப்பு பாலம் பழுதடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த பாலம் வழியாக செல்ல முடியாத அவலம் நீடிக்கிறது. எனவே பாலத்தை சீர்செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : Nagai Akkaraikulam Vettukulam Bridge road ,
× RELATED பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்