×

மண்டைக்காடு கோயிலில் இரவு காவலர் பணியிடம் காலி

குளச்சல், நவ.19: குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் மாசிக்கொடை, ஆவணி மாதம் அஸ்வதி பொங்கல் வழிபாடு மட்டுமில்லாமல் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கேரளா போன்ற வெளி மாநிலத்திலிருந்து வரும் பக்தர்கள் நடை திறக்கும் அதிகாலை வேளையிலேயே வந்து அம்மனை வழிபட்டு செல்வர். இதனால் பக்தர்களின் பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், போலீசார் இரவு நேர பாதுகாப்பிற்கு பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக காவலர்கள் நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது. தொடக்கத்தில் 4 காவலர்கள் பணியமர்த்தப்பட்ட இக்கோயிலில் இறுதியாக ஒரே ஒரு காவலர் மட்டும் பணியாற்றி வந்தார். தற்போது அந்த ஒரு காவலர் பணியிடமும் காலியாக உள்ளது.

இந்நிலையில் சபரிமலைக்கு மாலையணிந்து விரதம் துவங்கும் ஐயப்ப பக்தர்கள் தினமும் இந்த கோயிலில் வந்து அம்மனை வழிபடுவர். தவிர வெளி மாவட்ட, மாநில ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி சென்றுவிட்டு மண்டைக்காடு கோயில் வந்து சபரிமலை செல்வர். இதனால் தினமும் வழக்கத்தை விடவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே ஒன்றரை வருடமாக காலியாக காணப்படும் இந்த இரவு காவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் இரவு காவலர் பணியிடம் தவிர இக்கோயிலில் கடந்த 2 வருடத்திற்கு முன் தொடங்கப்பட்ட தங்க தேர் பாதுகாப்பு அறைக்கு 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த பாதுகாப்பு பணியிடமும் நிறுத்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Mandakkadu Temple ,
× RELATED வெயில் அதிகரித்து வருவதால் கோட்டார்...