×

மூன்று வருகை பதிவேட்டால் ஆசிரியர்களுக்கு வீணாகும் நேரம்

சிவகங்கை, நவ.14: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவியில் வருகையை பதிவு செய்வது கடந்த ஜனவரி முதல் படிப்படியாக இப்பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளியில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள இக்கருவி கல்வி மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கல்வித்துறையுடன் இணைப்பில் இருக்கும். ஆனால் பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர்களே இல்லை. கம்ப்யூட்டர் பாடப்பிரிவு உள்ள பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் இருந்தாலும் அவைகள் அனைத்தும் பழைய வெர்சன்களை கொண்டதாகும். மிகவும் மெதுவான செயல்பாட்டை கொண்ட இந்த கம்ப்யூட்டருடன் உள்ள சி.பி.யுவில் தற்போதைய மென் பொருட்களை ஏற்ற முடியாத நிலை உள்ளது. மேலும் இண்டர்நெட் வேகம் என தினமும் காலையில் பயோமெட்ரிக்கில் விரல் ரேகை பதிவு செய்வதற்கே நீண்ட நேரம் பிடிக்கிறது. இந்நிலையில் மாணவர்களின் விபரங்களை பதிவு செய்து வரும் இஎம்ஐஎஸ் எண் பதிவேற்றம் செய்யும் மென் பொருளிலும் ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும். இதிலும் இண்டர்நெட் பிரச்னையால் பாதிப்பு ஏற்படும். இவை இரண்டும் தவிர வழக்கம்போல் நோட்டு புக்கில் ஆசிரியர் வருகை பதிவு செய்து கையொப்பமிட வேண்டும். இவ்வாறு மூன்று வருகை பதிவேடுகளில் வருகையை பதிவு செய்வதால் தேவையற்ற நேர விரையம் ஏற்படுவதாக ஆசிரியர் புகார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது: குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகையை பதிவு செய்ய வேண்டும். ஆனால் கம்ப்யூட்டர் பிரச்னை, இண்டர்நெட் பிரச்னையால் பயோமெட்ரிக் கருவி முன் காத்திருக்க வேண்டியுள்ளது. ஓராசிரியர் பள்ளிகளில் இப்பணிகளை செய்வதற்கே காலை நீண்ட நேரம் பிடிக்கிறது. பதிவு செய்ய நேரம் அதிகமானால் வட்டார கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து போனில் தகவல் கேட்கின்றனர். அதற்கும் பதில் சொல்ல வேண்டும். இதனால் முதல் பாட வகுப்பு பாதிக்கிறது. எதற்கு மூன்று வருகை பதிவேடு என தெரியவில்லை. இதுபோல் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடம் எடுப்பது முக்கியம் என்பதை கல்வித்துறை புரிந்து கொள்ள வேண்டும். உரிய கட்டமைப்பு, உபகரணங்கள் இல்லாமல் திட்டத்தை மட்டும் அறிவிப்பதால் பயனில்லை என்றனர்.

Tags : teachers ,
× RELATED பவானி நதிக்கு செல்லக்கூடிய...