×

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தினமும் தேர்வு நடத்தப்படும்: சிஇஓ முருகன் பேட்டி

கிருஷ்ணகிரி, நவ.13: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, தினமும் 30 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என, புதிதாக பதவியேற்ற முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த மகேஸ்வரி, கரூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஆகும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு முடித்த இவர் 2009ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் தேர்வாகி மாவட்ட கல்வி அலுவலராக பதவி ஏற்றார். ஆரம்பத்தில் கோவை மாவட்ட கல்வி அலுவலராக பதவி வகித்த அவர், முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று விழுப்புரம், கன்னியாகுமரி, திருப்பூர், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றினார். பின்னர் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி வகித்து வந்த அவர், அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.

புதியதாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தினமும் மாணவர்களுக்கு 30 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளேன். இந்த விடைத்தாள்களில் மாணவர்கள் பெற்றோரிடம் கையெழுத்து பெற்று வர வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் நிலை கண்டறியப்பட்டு, அவர்கள் அதிக மதிப்பெண் பெற பயிற்சி அளிக்கப்படும். மேலும் மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் காலதாமதமாக வரக்கூடாது. இனி வரும் காலங்களில் யாரேனும் தாமதமாக வந்தால் முதலில் விளக்கம் கேட்கப்படும். தொடர்ந்து காலதாமதமாக வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : day exam ,Murugan ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்