×

கடுமையான கெடுபிடிகளுக்கு இடையே தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்: மாணவர்களைவிட கூடுதலாக 30,000 மாணவிகள்

சென்னை: நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று தொடங்கியது. மொத்தம் 83 ஆயிரத்து 600 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் தான் இந்த படிப்புகளில் சேர்க்கப்படுவார்கள். இத்தேர்வை எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரம் மாணவ மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு 3862 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அதைவிட கூடுதலாக 202 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி நேற்று மதியம் 2 மணி அளவில் நீட் தேர்வு தொடங்கியது. முன்னதாக ஹால்டிக்கெட்டில் தெரிவித்தபடி மாணவ-மாணவியர் கொரோனா விதிகளை பின்பற்றி தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கும் என்று அறிவித்து இருந்தாலும், நேற்று மதியம் 12.30 மணியில் இருந்து மதியம் 1.30மணி வரைதான் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டில் நடந்தது போல  இந்த ஆண்டும் தேர்வு மைய வாயில்களில் தேர்வு நடத்தும் அலுவலர்கள் நிற்க வைக்கப்பட்டு, மாணவியரின் சான்றுகளை சரிபார்த்தனர். அப்போது தேர்வு எழுத வருவோரின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. தேர்வு அறையில் ஒருவருக்கு ஒருவர் 2 மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத வரும் மாணவர்கள் 2 போட்டோ, ஆதார் அட்டை, ஹால்டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், தேர்வு எழுத வந்தவர்கள் மேற்கண்ட மூன்று பொருட்கள் தவிர வேறு எதுவும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. குறிப்பாக தேர்வு எழுதுவதற்காக எடுத்து வந்த பேனா, தண்ணீர் பாட்டில்கள் என எதுவும் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. இது தவிர உடை விஷயத்தில் இந்த முறை அதிகம் கடுமை காட்டாவிட்டாலும், கையில் கயிறு கட்டியிருந்தால் அதை அறுத்தல், காதுகளில் அணிந்து வந்த அணிகலன்கள் அகற்றுவது என்ற கெடுபிடிகள் தொடர்ந்தன. இதனால் மாணவ மாணவியர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ள தேர்வுக்கு மதியம் 12.30 மணிக்கே உள்ளே அனுமதிக்க தொடங்கியதால், பெரும்பாலான மாணவ மாணவியர் மதிய உணவு உண்ணாமல் பசியுடன் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. மயிலாப்பூர் பிஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு நேற்று மதியம் 1.34க்கு வந்த சைதாப்பேட்டையை சேர்ந்த பழனியப்பன் என்ற மாணவர் உள்ளே செல்லு அலுவலர்கள் மறுத்துவிட்டனர். மாணவர்களுடன் வந்த பெற்றோர் தேர்வு மையத்தின் வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடுமையான வெயில் நிலவிய போதும் அவர்கள் காத்திருக்க தேசிய தேர்வு முகமை எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. இதனால் மாலை 5 மணி வரை பெற்றோர் வெளியில் வெயிலில் காத்திருந்தனர். இந்த நீட் தேர்வுக்கான மாதிரி விடைத்தாள் விவரங்கள் விரைவில் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேர்வு முடிவுகளும் தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய நீட் தேர்வில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 224 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் எழுதினர். இவர்களில் 40 ஆயிரத்து 376 பேர் மாணவர்கள், 70 ஆயிரத்து 594 பேர் மாணவியர். மாற்று பாலினத்தவர் ஒருவர் என தேர்வு எழுதியுள்ளனர். இது தவிர தமிழகத்தில் 36 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 888 பேர் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5741 பேர் தமிழ்  வழியிலும், 2986 பேர் ஆங்கில வழியிலும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியரில் 1221 பேர் தமிழிலும், 1940 பேர் ஆங்கிலத்திலும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.சென்னையில் மட்டும் 17,000 பேர்* சென்னையில் நீட் தேர்வுக்காக 33 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் நேற்று 17,992 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 6263 பேர் மாணவர். 11729 பேர் மாணவியர். * செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தேர்வு மையங்கள் மூலம் 2001 பேர் எழுதினர். அவர்களில் 667 பேர் மாணவர். 1334 பேர் மாணவியர். * காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்கள் மூலம் 1834 பேர் எழுதினர். அவர்களில் 693 பேர் மாணவர். 1141 பேர் மாணவியர். * திருவள்ளூர் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்கள் மூலம் 2275 பேர் எழுதினர். அவர்களில் 806 பேர் மாணவர். 1469 பேர் மாணவியர்….

The post கடுமையான கெடுபிடிகளுக்கு இடையே தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்: மாணவர்களைவிட கூடுதலாக 30,000 மாணவிகள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,MBBS ,BDS ,AYUSH ,NEET ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...