×

பேச்சிப்பாறை-கோதையாறு சாலையில் திக்திக் பயணம்: அரசு துறைகளுக்கு இடையே பனிப்போரால் விபரீதம்

மார்த்தாண்டம், நவ.13: குமரி  மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கோதையாறு பகுதியில் ஏராளமான மலைவாழ்  மக்கள் வாழும் கிராமங்கள் உள்ளன. மேலும் மின் உற்பத்தி நிலையம், அணைகள்,  கல்வி நிறுவனங்கள் என அரசு அலுவலகங்கள், குடியிருப்புகளும் உள்ளன. இங்கு வந்து செல்லும் மக்கள்  மற்றும் இப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வசதிக்காக நாகர்கோவில்,  மார்த்தாண்டம், குளச்சல், குலசேகரம் ஆகிய இடங்களில் இருந்து அரசு பஸ்கள்  இயக்கப்படுகின்றன. பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு வரை செல்லும்  சாலை மலைச்சாலையாகும். குறுகலான இந்த சாலை கொண்டைஊசி வளைவுகள் நிறைந்த  சாலையாகும். மலைவாழ் பகுதியான அடக்காடு, மூக்கறைக்கல், மோதிரமலை,  கோலோஞ்சிமடம்,  மாங்காமலை, மணலிக்காடு உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த  மக்கள்  மற்றும் மின்நிலையம் செல்வோர், வனத்துறையினர், ரப்பர் வாரியத்தினர்  இந்த சாலை வழியாக செல்கின்றனர்.

சமீப காலமாக இந்த சாலை பல  இடங்களில் சேதமடைந்து பெரிய பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதனால் இந்த  சாலையில் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்ல ேவண்டிய நிலை உள்ளது. சரிவான  இந்த சாலையின் ஒரு புறம் மிகவும் தாழ்வான பகுதியாகும். சாலையில் உள்ள குண்டு, குழிகளில் செல்லும் போது வாகனங்கள் தடுமாறினால் பள்ளத்தில்  கவிழ்ந்து பெரும் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த  சாலையை மின்வாரியம் பராமரித்து வருகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்  என மின்வாரிய அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்கள்  அனுப்பினர். ஆனால் இந்த சாலையை வனத்துறையும், ரப்பர் கழகமும் தான் அதிகமாக  பயன்படுத்துகின்றன. வனத்துறை இந்த வனப்பகுதியை சூழியியல் சுற்றுலாத்தலமாக  அறிவித்து இங்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கிறது. எனவே  அவர்கள் தான் சாலையை செப்பனிட வேண்டும் என மின்வாரியம் திட்டவட்டமாக  கூறியுள்ளது.

அரசு துறைகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பனிப்போரால்  பேச்சிப்பாறை-கோதையாறு மலை சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இங்கு வரும்  சுற்றுலா பயணிகளும், பொதுமக்கள் தினமும் அச்சத்தோடு பயணம் செய்யும் அபாய  நிலை உள்ளது. இந்த சாலையில் செல்லும் மக்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு  எந்த உத்தரவாதமும் கிடையாது. குறிப்பாக கோதைமடக்கு பகுதியில்  சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கார் போன்ற  சிறிய வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதையடுத்து மலைவாழ் மக்கள் சங்க தலைவர்  ரெகு தலைமையில் மலைவாழ் மக்கள் திரண்டு அந்த பள்ளத்தில் கல் மற்றும் மண்  போட்டு தற்காலிகமாக நிரப்பினர். இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ்  மக்கள் மற்றும் இங்கு வரும் அரசு துறையினர், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி  இந்த சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும் என மலைவாழ் மக்கள் சார்பில்  கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு  அனுப்பியுள்ளனர்.

Tags : trip ,Tiktik ,road ,accident ,Pachiparai-Gothayaru ,government departments ,Cold War ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...