×

பூமி வெப்பமயமாதலை தடுக்க பாரம்பரியமிக்க மரக்கன்றுகளை நட வேண்டும்: போலீசாருக்கு ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் வேண்டுகோள்

நாகர்கோவில், நவ.13: மண்ணின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையிலான மரங்களை நடும் பணியிலும் போலீசார் ஈடுபட வேண்டும் என்று தென் மண்டல காவல்துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன் கேட்டுக் ெகாண்டு உள்ளார். பூமி வெப்பமயமாதலை தடுக்கும் விதமாகவும், மரங்கள் தான் மழைக்கு ஆதாரம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் காவல் நிலையங்களில் மரங்கள் நடப்பட வேண்டும் என்று தென் மண்டல காவல்துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன் கூறி உள்ளார். இது தொடர்பான திட்டத்தை, மதுரையில் உள்ள தென் மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் அவர் தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

அப்போது, மரங்கள் தான் மழைக்கு ஆதாரம் ஆகும். பூமி வெப்பமயமாதலை தடுக்கவும் மரங்கள் உதவுகின்றன என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில், காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தட்ப  வெப்ப நிலைக்கு ஏற்ப அக்கால தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள மண்ணின் மரங்களான கடம்பு, அரசு, வேங்கை, நாகலிங்கம், மகிழம், இலுப்பை, கருங்காளி, வலுக்கை, கூந்தப்பனை, செந்தனம், பாடாதி, மகாகனி, மந்தாரை, மலைவேம்பு, பலா, புங்கை, பூவரசு, சரக்கொன்றை, செந்நாவல், மருதம், பிள்ள மருது, மகா வில்வம் ஆகியவற்றையும், மனோ ரஞ்சிதம், செம்பகம், பாரிஜாதம், பவளமல்லி, அடுக்கு நந்தியாவட்டை ஆகிய மலர் தாவரங்களையும் நட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காவல் நிலையங்கள் மட்டுமின்றி சாலை ஓரங்களிலும், பூங்காக்களிலும் இது போன்ற பாரம்பரிய மரக்கன்றுகளை நட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூமி வெப்பமயமாதலை தடுக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தில் காவல் துறையினர் தங்களை முன்னிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.ஜி. உத்தரவை தொடர்ந்து, குமரி மாவட்டத்திலும் காவல்துறை சார்பில் அதிகளவில் மரக்கன்றுகள் நடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Shanmugam Rajeswaran ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது