×

உக்கிரன்கோட்டையில் சுற்றுச்சுவர் இல்லாத பஞ்சாயத்து குடிநீர் கிணறு பாதுகாக்கப்படுமா?

மானூர், நவ. 13: உக்கிரன்கோட்டையில் சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பின்றி உள்ள பஞ். குடிநீர் கிணற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானூர் ஒன்றியம் உக்கிரன்கோட்டை ஊராட்சி, 5 கிராமங்களை உள்ளடக்கிய 5000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டது. 1955ம் ஆண்டு பஞ்சாயத்தாக அறிவிக்கப்பட்ட போதே முதல்தர ஊராட்சியாக இருந்தது. இங்கு குடிநீர் தேவைக்காக கிராமங்கள் வாரியாக ஒரு கிணறும், உக்கிரன்கோட்டையில் மக்கள் தொகை அதிகம் என்பதால் 3 கிணறுகளும் தோண்டப்பட்டு  சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதில் ஊரின் மேல்பகுதியில்  உள்ள  கிணற்றின் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் விநியோகமும்,  அதன் அடிப்பகுதியில் அலுவலகம் அமைத்து அதிலிருந்து வானொலி பெட்டி மூலம் செய்திகளும் ஒலிபரப்பப்பட்டு வந்தது.

தொடர்ந்து அதிகரித்த மக்கள் தொகை, ஊருக்குள் துவங்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி, 36 படுக்கை கொண்ட 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பல்வேறு வகையில் கிராமம்  விரிவடைந்ததால் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சின்டக்ஸ் டேங்குகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தன. இதனால் தண்ணீர் இருந்தும் குடிநீர்  கிணறுகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதன் காரணமாக தற்போது குடிநீர் கிணறுகள், சுற்றுச்சுவர்கள்  இடிந்து பராமரிப்பின்றி பாதுகாப்பில்லாமல் உள்ளன.  குறிப்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் இருந்தும் அவற்றை பராமரிக்காததால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பாதுகாப்பின்றி காட்சியளிக்கிறது. இந்த கிணற்றில் தண்ணீர் பாசிபடர்ந்து காணப்படுவதுடன் இவ்வழியாக செல்லும் சிறார்கள், முதியவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

எனவே பஞ்சாயத்து நிர்வாகம், உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவர் அமைத்து உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் தற்போதுள்ள சின்ெடக்ஸ் டேங்குகளும், ஆழ்குழாய் கிணறுகளும் பராமரிக்கப்படாமல் குடிநீர் விநியோகிக்கப்பட்டு உள்ளதால், இதுபோல் தண்ணீர் கிடக்கும் குடிநீர் கிணறுகளை பராமரித்து குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வள்ளியூரில் பைக் திருடிய வாலிபர் கைது