×

சாத்தான்குளம் அருகே சிஎஸ்ஐ சபை நிர்வாகிக்கு கத்திக்குத்து:4பேருக்கு வலை

சாத்தான்குளம், நவ.13:சாத்தான்குளம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் சிஎஸ்ஐ சபை நிர்வாகியை கத்தியால் குத்திய 4பேரை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகேயுள்ள கருங்கடல் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஐசக் ரத்தினகுமார்(35). இவர் கருங்கடல் சிஎஸ்ஐ சபையில் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மோசஸ் மகன் பீட்டர் பிரபாகரன் என்பவருக்கும் டயோசீசன் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் வாலிபர் சங்கம் கணக்கு தொடர்பாக கடந்த 10ம்தேதி அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பீட்டர் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரும் ஐசக் ரத்தினகுமார் வீட்டுமுன் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனை தட்டிக்கேட்ட ஐசக் ரத்தினகுமாருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர் அங்கு வந்ததால் தாக்குதலில் ஈடுபட்ட பீட்டர் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரும் தப்பியோடி விட்டனர். காயமடைந்த ஐசக் ரத்தினகுமார், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சாத்தான்குளம் சப்.இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள பீட்டர் பிரபாகரன், அசரியா மகன் ஜெயசுந்தர், ஓபேஸ் மகன் தானியேல், ஜெயகுமார் மகன் ஜெயசிங்க் ஆகிய 4 பேரை தேடி வருகிறார்.

Tags : CSI councilman ,sathankulam ,
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கு 3 மாதத்தில்...