×

கோளாந்தி கிராமத்தில் மூன்று மாதமாக குடிநீர் வழங்கவில்லை

சிவகங்கை, நவ.12: காளையார்கோவில் அருகே கோளாந்தி கிராமத்தில் ஆதிதிராவிட குடியிருப்பிற்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. காளையார்கோவில் அருகே கோளாந்தி கிராமம், ஆதிதிராவிட குடியிருப்பு மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில், காளையார்கோவில் ஒன்றியம் மாரந்தை ஊராட்சி கோளாந்தி கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு வசிப்பவர்கள் ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீரை மட்டுமே நம்பியுள்ளோம். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் நீர் வழங்கப்படவில்லை. மேலும் போர்வெல் மூலம் வழங்கப்படும் உப்புநீரும் வழங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் நீரில்லாமல் கடும் அவதியடைந்து வருகிறோம். வேறு ஊர்களில் சென்று நீர் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் எங்களது குடியிருப்பை கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் குடியிருப்பிற்கு நீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : village ,Golanti ,
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி