புளியங்குடி நவ.11 : புளியங்குடியில் அடுத்தடுத்த இரு இடங் களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. புளியங்குடியில் இருந்து டி என் புதுக்குடி வழியாக பாம்புகோவில்சந்தை செல்லும் வழியில் கற்குவேல் அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலின் வெளிப்புறம் உள்ள உண்டியலை நேற்று முன்தினம் இரவு சமூக விரோதிகள் உடைத்துஅதில் இருந்த பணத்தை எடுத்துசென்று விட்டனர். காலையில் உண்டியல் உடைக்கப்பட்டத்தை பார்த்த கோயில் நிர்வாகத்தினர் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல் துணை ஆய்வாளர் தர்மராஜ் தலைமையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புளியங்குடி டிஎன் புதுக்குடி ராமசாமி நாடார் தென்வடல் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் காமராஜ் (58). இவர் நாடார் பள்ளி அருகில் ஒரு சிறிய வீட்டோடு ஒரு சிறு கடையும் சேர்த்து கட்டி வசித்து வந்தார். கடையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் வியாபாரம் செய்து வந்தார்.
இவருடன் மனைவி, மகன், மருமகள் ஆகியோரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இடப்பற்றாக்குறையால் பகலில் அனைவரும் கடையோடு இருக்கும் வீட்டில் தங்கி சமைத்து சாப்பிட்டு விட்டு இரவு தூங்குவதற்காக மட்டும் அரசு மருத்துவமனை அருகில் இருக்கும் இவர்களது மற்றொரு வீட்டிற்கு செல்வார்கள். நேற்று இரவு கடையை மூடிவிட்டு பழைய வீட்டிற்கு சென்று விட்டார்கள். நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடையிலிருந்த குளிர் பானங்களை குடித்து விட்டு கடை வழியாக வீட்டிற்குள் நுழைந்து அங்கு இரவு சமைத்த உணவையும் நிதானமாக சாப்பிட்டு விட்டு கடையில் இருந்த ரூ.10ஆயிரம் மற்றும் அவரது வீட்டு பத்திரங்களை கொள்ளையடித்து சென்றார். காலையில் கடையை திறக்க வந்த காமராஜ் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துணை ஆய்வாளர் தர்மராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.