×

சேந்தமங்கலம் அருகே விபத்து ஏற்படுத்தும் இரும்பு தடுப்பை அகற்ற கோரிக்கை

சேந்தமங்கலம், நவ.12:  சேந்தமங்கலம் அருகே முத்துக்காப்பட்டி கொண்டம்பட்டிமேடு பகுதியில், விபத்தை ஏற்படுத்தும் இரும்பு தடுப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல்லில் இருந்து கொல்லிமலை செல்லும் சாலையில், முத்துக்காப்பட்டி அடுத்து கொண்டம்பட்டிமேடு பகுதி அமைந்துள்ளது. கொல்லிமலை செல்ல பிரதான சாலை என்பதால், வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. கொண்டம்பட்டிமேடு பகுதியில் உள்ள வளைவு பகுதியில், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது.  இப்பகுதியில் நிகழ்ந்த விபத்துகளில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதையடுத்து, இந்த இடத்தில் விபத்துக்களை தடுக்க, சாலையில் வேகத்தடை  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேகத்தடை அருகே இரவு நேரங்களில் போலீசார் இரும்பு தடுப்புகளை நெருக்கமாக வைத்து விட்டு செல்கின்றனர்.  இதனால், வாகனத்தில் வருவோர் இரும்பு தடுப்பை மட்டும் கவனித்துவிட்டு, வேகத்தடுப்பை கவனிப்பது இல்லை. அதன் மீது வாகனத்தை வேகமாக ஏற்றி, நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விபத்துக்களை தடுக்க, வேகத்தடை அருகே வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பை போலீசார் அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags : removal ,Sendhamangalam ,
× RELATED சிவகாசி அருகே ஆனைக்குட்டம்...