×

ராயப்பன்பட்டி பகுதியில் மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை அமோகம்

உத்தமபாளையம், நவ.8: ராயப்பன்பட்டி பகுதியில் மாணவர்களை குறிவைத்து பொட்டலங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. தேனி மாவட்ட புதிய எஸ்பி இப்பகுதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராயப்பன்பட்டி போலீஸ் சரக கட்டுப்பாட்டில் நாராயணதேவன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி, உள்ளிட்ட ஊராட்சிகள், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அடங்குகின்றன. இப்பகுதிகளில் கஞ்சா புழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. குறிப்பாக, கூலிக்கு ஆட்களை நியமித்து கஞ்சாவை பொட்டலம் போட்டு விற்பனை செய்யும் கும்பல்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர்களை குறிவைத்து நடக்கும் கஞ்சா விற்பனையில் மிகபெரிய தொகைக்கு விற்பனை நடக்கிறது.

இதில் வயதான முதியவர்களை கஞ்சா விற்கும் கும்பல் ஈடுபடுத்துகிறது. இவர்கள் டாஸ்மாக் கடைகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மலையடிவாரங்கள் போன்றவற்றில் ஒரு பொட்டலம் ரூ.50க்கு விற்பனை செய்கின்றனர். இதில் கம்பம் வடக்குப்பட்டியில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து சில்லரைக்கு விற்பனை செய்பவர்களும் அதிகம். இப்படி கஞ்சா விற்பனை களைகட்டி காணப்பட்டும், உள்ளூரில் உள்ள போலீசார் இதை கண்டும், காணாமல் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சுருளி அருவி, சுருளிப்பட்டி, சின்னஓவுலாபுரம், அணைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் போதையேற்றி ஆட்டம்போடும் குடிமகன்கள் கஞ்சாவையும் சேர்த்து குடிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடக்க முடியவில்லை. பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதால் குடும்பம் கெடுகிறது. உள்ளூர் போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, தேனி மாவட்ட புதிய எஸ்பி, ராயப்பன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED கோடை மழையில் பூத்து குலுங்கும் ஈஸ்டர் லில்லி