×

குலைநோயில் இருந்து நெல் பயிரை காப்பாற்ற எளிய வழி முறைகள் வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை

காரைக்குடி, நவ.7: நெல் பயிரில் ஏற்படும் குலைநோயை தடுப்பது குறித்து குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.  சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்துள்ள நிலையில் விவசாயிகள் நேரடி விதைப்பு, ஒற்றைநெல் நடவு மற்றும் வரிசை நடவு முறை போன்ற முறைகளை கடைபிடித்து வருகின்றனர். இதில் குலைநோய் தாக்குதல், இலைச்சுருட்டு புழு மற்றும் நெல்குருத்து பூச்சிகளின் சேதம் அதிமாக வர வாய்ப்புள்ளது. இதில் இருந்து பயிர்களை காப்பது குறித்து குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் தெரிவித்துள்ளதாவது. குலைநோய் பாதிக்கப்பட்ட பயிரின் அனைத்து பகுதிகளிலும் பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும். இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன், காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவப் புள்ளிகள் காணப்படும். தீவிர தாக்குதலின் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும். சேமிப்பு நெல் விதைகள் மற்றும் தாக்கப்பட்ட தூர்களில் இந்நோய் காரணி இருக்கும். வித்துகள் ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்கும், அடுத்த பருவ நெல் பயிருக்கும் இந்நோய் பரவும். பூசண வித்துக்கள் காற்றின் மூலம் மற்ற நெற்பயிர்களுக்கு நீண்ட தூரம் வரை பரவும். மேலும் விவசாயிகள் அதிக அளவில் டிஏபி மற்றும் யூரியா கலந்து அடி உரமாக இடுவதாலும், தழைச்சத்து உரங்களாலும் இந்நோய் அதிக அளவில் வரும்.

இதை தடுக்க வரப்பிலிருந்து களைகளை அழிக்க வேண்டும். அதிகப்படியான தழைச்சத்து உர பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். நோய் தாங்கும் ரகங்களை பயிரிடலாம். சூடோமோனாஸ் புலூரசன்ஸ் என்ற எதிர் உயிர் பாக்டீரியாவுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். நாற்று நடவு செய்யும் போது 25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த நீரில் 2.5 கிலோ சூடோமோனாஸ் புலூரசன்ஸ் பொடியை தூவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுகளின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் புலூரசன்ஸ் பொடியை 0.5 சதவீதம் என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும். விதை நேர்த்தி மற்றும் நாற்று நேர்த்தி செய்யவில்லையெனில் சூடோமோனாஸ் ஏக்கருக்கு 10 கிலோ அளவில் எடுத்து மக்கிய தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து விதைத்த 15 அல்லது 20 நாட்களுக்கு பிறகு இட வேண்டும். குருத்துப் பூச்சி மற்றும் இலைசுருட்டுப்புழு தாக்குதல் தழைச்சத்து அதிகமாக இடுவதால் வர வாய்ப்புள்ளது. இதனை தடுக்க ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.

Tags : Agronomists ,bush ,
× RELATED வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை தீபாவளி...