×

மின்வாரிய கேங்மென் ஆட்கள் தேர்வில் கஜா புயலில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா?

மதுராந்தகம், நவ.7: தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணி புரிந்து, கஜா புயலின்போது ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, தற்போது நியமனம் செய்யவுள்ள கேங்மேன் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர் பார்க்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்  ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புகளை சீர்செய்ய செங்கல்பட்டு மின் பகிர்மான பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதில், செங்கல்பட்டில் இருந்து 200 பேர், மதுராந்தத்தில் 300, அச்சிறுப்பாக்கத்தில் 200,  மறைமலைநகரில் 200,  ஸ்ரீபெரும்புதூரில் 100,  திருமழிசையில் 100 பேர் என மொத்தம் 1100 பேர் பல்வேறு குழுக்களாக பிரித்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த பகுதிகளுக்கு சென்ற இவர்கள், 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை அங்கேயே தங்கி சீரமைப்பு பணிகளை செய்தனர். அப்போது, இவர்களுக்கு ஒருநாள் ஊதியமாக 1,100 வழங்கப்பட்டது. அவர்களும் பணிகளை முடித்துவிட்டு திரும்பினர். அந்த பணிகளை அப்போது, பார்வையிட்ட தமிழக மின்வாரிய அமைச்சர் வெகுவாக பாராட்டினர்.

மேலும், அவர்களுக்கு உறுதி மொழியாக, இந்த கடுமையான பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, மின்வாரிய பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும்போது, முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிலையில், தற்போது தமிழக மின்வாரியத்தில், சுமார் 5 ஆயிரம் கேங்மேன் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. அமைச்சர் கூறியதைபோல், கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்ட ஒப்பத்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு அனுபவ சான்றுகளை உடனடியாக அதிகாரிகள் வழங்க வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர். அவ்வாறு சான்றிதழ் வழங்கப்பட்டால், ஒப்பந்த தொழிலாளர்கள் தற்போதைய பணி நியமனத்தின்போது  முன்னுரிமை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மேலும், தற்போதைய கேங்மேன் பணிக்கு அனுபவ சான்றிதழ் தேவைப்படுவதால், கஜா புயலின்போது கடுமையாக உழைத்த பணியாளர்களுக்கு உடனடியாக அனுபவ சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் பணியாளர் பொறியாளர் சங்க மாநில பொருளாளர் என்.நேருஜி கூறுகையில், கஜா புயலின்போது, ஒப்பந்த தொழிலாளர்களின் பணி மிகவும் சவாலாக இருந்தது. அப்போது, அவர்களது பணியை அமைச்சரும் பாராட்டினார். செங்கல்பட்டு மின் பகிர்மானம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு முறையான சான்றிதழ் வழங்க வேண்டும். கேங்மென் பணியில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சான்றிதழ் வழங்குவது குறித்து பலமுறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, அந்த ஊழியர்களின் எதிர்கால நலனை கருதி  அவர்களுக்கு அனுபவ சான்றுகளை வழங்கவேண்டும் என்றார்.

Tags : contract employees ,gangmen ,Caja Storm ,
× RELATED திருப்பதி மாநகராட்சியில் போலி...