×

கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதர்மண்டி கிடக்கும் அரசு குடியிருப்புகள்

சிவகங்கை, நவ.6: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் அரசு குடியிருப்பு வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. இதனால் இங்கு வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் துறை அலுவலக கட்டிடங்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த கட்டிடங்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் என அனைத்தும் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் கடுமையான சேதமடைந்த நிலையில் இருந்து வருகின்றன. அரசு குடியிருப்புகள் ஏ, பி, சி, டி, இ என ஐந்து பிளாக்குகளாக உள்ளன.

இ பிளாக்கில் உள்ள வீடுகள் மிக மோசமான நிலையில் சிதிலமடைந்துள்ளதால் இந்த குடியிருப்பில் இருந்த பெரும்பாலோனோர் காலி செய்துவிட்டனர். சி, ஏ பிளாக்கிலும் கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலர் வீடுகளை காலி செய்துவிட்டனர். சிலர் மட்டும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு குடியிருப்புகளை சுற்றிலும் அதிகப்படியான செடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள இந்த புதர்கள் இவ்வழியே செல்வோருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. குடியிருப்புகளில் பல வீடுகள் காலியாக பராமரிப்பின்றி இருப்பதாலும், சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடப்பதாலும் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் உள்ளது. புதர்களில் மழை நீர், கழிவு நீர் தேங்கி கொசுக்களின் குடியிருப்பாக மாறியுள்ளன.

அரசு ஊழியர்கள் கூறுகையில், குடியிருப்புகளை சுற்றிலும் புதர்கள் மண்டியிருப்பதால் பாம்புகள், பூச்சிகளின் நடமாட்டம் அதிகப்படியாக உள்ளன. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் கடும் அச்சத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குடியிருப்புகளுக்கே இந்த நிலை உள்ளது. புதர்களால் அலுவலகங்களுக்கு உள்ளேயும் கொசுக்கள், பூச்சிகள் அதிகம் உள்ளன. புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...