×

ஊர் கூடியதால் ஊரணி நிரம்பியது

நத்தம், நவ. 6: நத்தம் அருகே சிறுகுடியில் மக்கள் ஒன்று கூடி நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரியதால் அங்குள்ள ஊரணியில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. நத்தம் அருகேயுள்ளது சிறுகுடி கிராமம். இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவ்வூரானது மலைகளுக்கும், குன்றுகளுக்கும் இடையில் பசுமை படர்ந்து காணப்படும் குறிஞ்சி நில அமைப்பை கொண்டதாகும். ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக இவ்வூரில் உள்ள ஊரணி வறண்டதுடன், அதன் குளிர்ச்சியான சூழ்நிலை மாறியது. மேலும் இங்கு நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்தில் செல்ல துவங்கியது. இதையறிந்து இளைஞர்கள் ஒன்று கூடி சிறுகுடி கிராம நலம் விரும்பிகள் என்ற அமைப்பை உருவாக்கினர். இதில் ஊரிலுள்ள இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சாதி, மத, பேதமின்றி அனைவரும் சேர்த்தனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடு வாழ் மக்களையும் ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து அனைவரின் பங்களிப்போடும், ஒத்துழைப்போடும் ஊரணிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டன. மேலும் கிராமங்களை சுற்றியுள்ள கண்மாய் கரைகளை தேர்வு செய்து பனை மற்றும் நிழல் தரும் மரங்களை நட்டனர். இதன் பலனாக கடந்த வாரம் பெய்த மழையினால் ஊரணிக்கு நீர்வரத்து ஏற்ப்டடு நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை கொண்டாடும் விதமாக சிறுகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை தலைமையாசிரியர் கதிரேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தோம். ஊர்வலத்தில் மரம் நடுவோம், பசுமையை காப்போம், பிளாஸ்டிக்கை முழுமையாக தவிர்ப்போம், சுற்றுச்சூழல் நிறைந்த தூய்மையான முன்மாதிரி கிராமம் ஆக்குவோம் என்ற கோஷங்களை மாணவ, மாணவிகள் எழுப்பியபடி சென்றனர். மேலும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தமாக வைத்து கொள்வோம், ஏரி, குளம், கண்மாய்க்கு மழைநீர் வரும் கால்வாய் வழித்தடங்களில் மல, ஜலம் போன்றவற்றை கழிக்காமல் பாதுகாப்போம். பள்ளி, கோயில் வளாகம் மற்றும் பொது இடங்களில் மதுபானங்கள் அருந்துவதை தவிர்ப்போம், பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடிடுவோம், மழைநீர் சேகரிப்பை வீடுகள்தோறும் அமைப்போம் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வீடுகள்தோறும் விநியோகித்து சென்றனர். பள்ளியில் துவங்கிய ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள், சிறுகுடி கிராம நலம் விரும்பிகள் அமைப்பினர் சிறுகுடி கிராமத்தை நாட்டின் முன்மாதிரி கிராமமாக உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.

Tags : procession ,crowds ,
× RELATED திருச்செந்தூர் கோயிலில் இன்று...