கடனை திருப்பி செலுத்தாததால் வீட்டுக்கு பூட்டு தனியார் வங்கி அலுவலகம் முன் வாலிபர் தர்ணா

கும்பகோணம், நவ. 6: கடனை திருப்பி செலுத்தாததால் கும்பகோணம் அருகே வீட்டுக்கு பூட்டு போட தனியார் வங்கி அலுவலகம் முன் வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.கும்பகோணம் அடுத்த மருத்துவகுடியை சேர்ந்த ரங்கசாமி மகன் இளங்கோவன் (29). தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது பெயரில் கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த கடனை மாதம்தோறும் ரூ. 6 ஆயிரம் வீதம் வங்கிக்கு திருப்பி செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வங்கி கடனை செலுத்துவதில் தாமதப்படுத்தியுள்ளார். இதையடுத்து வங்கி ஊழியர்கள் சிலர் நேற்று மருத்துவகுடியில் உள்ள இளங்கோவனின் வீட்டுக்கு சென்றனர். இளங்கோவன் அங்கு இல்லாததால் செல்போனில் தொடர்பு கொண்டு கடனை திருப்பி செலுத்துமாறு கேட்டுள்ளனர். அப்போது இளங்கோவன் கால அவகாசம் கேட்டுள்ளார். இதில் உடன்படாத வங்கி ஊழியர்கள், இளங்கோவனின் வீட்டில் இருந்த பொருட்களை வெளியேற்றி வீட்டை பூட்டி வந்து விட்டனர்.

இதையறிந்த இளங்கோவன் வந்தபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் உள்ள தனியார் வங்கி வாசலில் இளங்கோவன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார் .இதுகுறித்து இளங்கோவன் கூறுகையில், நான் கடனை செலுத்துவதில் தாமதப்படுத்தி உள்ளேன் என்ற காரணத்துக்காக வங்கிக்கு தொடர்பில்லாத சிலரை வைத்து எனது வயதான தாய், தந்தையை வெளியே அனுப்பி விட்டு கதவை சாத்தி வீட்டுக்கு பூட்டு போட்டு விட்டனர். எனது வீட்டை வங்கி நிர்வாகம் திறக்கும் வரை நான் இந்த இடத்தில் இருந்து திரும்ப மாட்டேன் என்றார்.

Related Stories:

>