×

வெங்காயம் வரத்து குறைவால் விலை கிடுகிடு உயர்வு

ஈரோடு, நவ. 6:  ஈரோட்டில் ஆர்கேவி ரோட்டில் உள்ள நேதாஜி தினசரி மார்க்கெட், சின்ன மார்க்கெட், சூரம்பட்டி சந்தை, வார சந்தைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டுகளில் ஈரோட்டின் சுற்றுப்புற பகுதிகளான சத்தியமங்கலம், பண்ணாரி, தாளவாடி, கொடுமுடி, சாவடிபாளையம் போன்ற பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயமும், ஆந்திரா, மத்திய பிரதேசம், நாசிக், கர்நாடகா போன்ற வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயமும் விற்பனைக்கு வருகிறது. இதில், ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் மிகப்பெரியது என்பதால், பெரியவெங்காயம் மொத்தமாக இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு இந்த மார்க்கெட்டில் 150 டன் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படும். இங்கிருந்து, வியாபாரிகள், ஓட்டல் கடைக்காரர்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை கேண்டின்களுக்கு வெங்காயம் அனுப்பப்படுகிறது. இதேபோல், உழவர் சந்தைகளில் உள்ளூர் உற்பத்தி செய்யப்படும் சின்ன, பெரிய வெங்காயத்தினை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மற்றும் தமிழகத்தின் சுற்றுப்புற மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் பெரிய வெங்காயத்தின் வரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மார்க்கெட்டில் 150 டன் வரத்தாகி வந்த பெரிய வெங்காயம் நேற்று 10 மடங்கு குறைந்து வெறும் 15 டன் மட்டுமே வரத்தானது.இதனால், ஈரோடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மொத்த விற்பனையில் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விலையில் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, கையில் வைத்துள்ள பணத்திற்கு ஏற்ப அரை கிலோ மட்டுமே வாங்கி செல்கின்றனர். இதேபோல் சைவ, அசைவ ஓட்டல்களில் பெரிய வெங்காயத்தை தவிர்த்தும் வாடிக்கையாளர்களுக்கு உணவு தயாரித்து தருகின்றனர். இதுகுறித்து ஈரோடு மார்க்கெட் வெங்காய விற்பனையாளர் கூறியதாவது:

விவசாயிகள் சின்னவெங்காயத்தை தனியாக ஊடுபயிராக பயிரிடுவதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளதால், அதன் தட்டுப்பாடு தவிர்க்கப்படும்.
பெரிய வெங்காயம் ஆந்திரா, கர்நாடகா, நாசிக், மத்திய பிரதேசம் போன்ற மாநிலத்தில் இருந்து வரத்தாகும். நாள் ஒன்றுக்கு 150 டன் வரத்தாகும்.
அதனை இருப்பு வைத்து, உலர வைத்து விற்பனை செய்யப்படும். ஈரோடு மார்க்கெட்டிற்கு தற்போது 15 டன் பெரிய வெங்காயம் மட்டுமே வரத்தாகி உள்ளது. மழை குறைந்தால் அடுத்த இரண்டு நாட்களில் வெங்காயம் வரத்து அதிகரிக்கும்., விலை உயர்வு மார்கழி வரை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு