×

காட்சி பொருளான குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை

குமாரபாளையம், நவ.5: குமாரபாளையத்தில் ₹1.75 ஒரு கோடி செலவில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.குமாரபாளையம் நகராட்சி சின்னப்பநாயக்கன்பாளையம் சந்தைப்பேட்டை வளாகத்தில் ₹1.75 கோடி செலவில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரை தொட்டியில் நீரேற்றப்படவே இல்லை.  தொட்டியின் தரைப்பகுதி சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. பகலிரவு பாராமல் இங்கு தாயம், சீட்டாட்டம் விளையாடப்படுகிறது. உடைத்து வீசப்பட்டுள்ள மதுபாட்டில்கள் கால்களை பதம் பார்த்து வருகிறது. உரிய பராமரிப்பின்றி கிடப்பதால் தொட்டியின் தூண்கள் விரிசல் விட்டவாறு காரை பெயர்ந்து திறக்கப்படும் முன்பே, தகுதி இழந்துவிடும் தன்மையில் உள்ளது.குமாரபாளையம், பவானி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த குற்றவாளிகள் பலரும் இங்கு கூடுவதால் அச்சத்திற்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, முன்னாள் நகர மன்ற தலைவர் சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் குடிநீர் தொட்டி வளாகத்தை சென்று பார்த்தனர்.

அங்கு உடைந்த பாட்டில்கள், பிரிக்கப்பட்ட புரோட்டா பொட்டலங்கள், கிழிக்கப்பட்ட சீட்டு கட்டுகள், கஞ்சா திணித்து புகைத்த பீடிகள் என சமூக விரோதிகளின் கூடாராமாக மாறியிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சேகர் கூறும்போது. குமாரபாளையம் மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத போதிலும் 3 ஆண்டுக்கு முன்பே ₹1.75 கோடியை முடக்கி போட என்ன அவசியம் வந்தது. கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஏன் இதில் நீரேற்றப்படவில்லை. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தை வீணாக்காமல் கட்டப்பட்ட தொட்டியை திறந்துவிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என்றார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி