×

டயர்வெடித்ததில் கார் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது துவரங்குறிச்சி அருகே பரபரப்பு

மணப்பாறை, நவ.5: துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் கல்லூரி மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மகன் கிறிஸ்டோ (20). இவர் புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சொந்த ஊரான நாகர்கோவிலிலிருந்து, நேற்று காரில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வளநாடு கைகாட்டி பாலத்தில் சென்றபோது, முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால், கார் நிலை தடுமாறி, இடது பக்கமுள்ள பக்கவாட்டு சுவர் அருகே கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த கிறிஸ்டோ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது கவிழ்ந்த இந்த காரில் இருந்து கரும்புகை கிளம்பியது.

சிறிதுநேரத்தில் கார் கொழுந்து விட்டு தீப்பிடித்து எரிந்தது. கார் கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்ததை கண்டு, அந்த சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் காரில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடானது. இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கார் தீப்பிடித்த சம்பவம் எதிரொலியாக, அந்த சாலையில் வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

Tags :
× RELATED திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் மக்கள்...