×

மர்ம நோய் தாக்குதலால் பண்ணைகளில் செத்து மடியும் வளர்ப்பு கோழிகள் தொடர் நஷ்டத்தால் விழிபிதுங்கும் உரிமையாளர்கள்

புதுக்கோட்டை, நவ.5: புதுக்கோட்டை மாவட்டத்தில் பண்ணையில் வளரும் கோழிகளுக்கு மர்ம நோய் ஏற்பட்டு செத்து மடிவதால் கோழி வளர்ப்போர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள கிராமங்களில் பல ஆயிரம் விவசாயிகள் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகே உள்ள தரிசு நிலத்தில் கிடுகு அல்லது ஆஸ்பட்டாஸ் சீட் உள்ளிட்ட வற்றை கொண்டு கொட்டகை அமைத்து அதில் கோழி குஞ்சுகளை வாங்கி விட்டு வளர்ந்து வருகின்றனர். சில தனியார் நிறுவனங்கள் அந்த கோழி குஞ்சுகளை மொத்தமாக பண்ணைக்கே கொண்டு வந்து அதனை விட்டு அதற்கு தேவையான தீவனங்கள், மருந்துகளை வழங்கிவிட்டு செல்கின்றனர். அவ்வப்போது தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் கோழிப்பண்ணைக்கு வந்து கோழி குஞ்சுகளின் வளர்ச்சி மற்றும் வளர்ப்புகளை கண்காணிக்கின்றனர். இந்த கண்காணிப்பின்போது பண்ணை வைத்திருப்போர்களிடம் கோழிகளின் தன்மைகளை எடுத்து கூறி எப்படி தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கிவிட்டு செல்கின்றனர்.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திபாவளி பண்டிகைக்கு முன்பு தொடர்ந்து நல்ல மழை பெய்தது. இந்த மழை விட்டபிறகு தற்போது என்ன காரணத்தினாலோ கோழிகள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்து வருகிறது.

குறிப்பாக இலுப்பூர் பகுதியில் உள்ள ராப்பூசல், உடையாம்பட்டி, கிரனூர் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் தொடர்ந்து செத்து மடிவதால் பண்ணை உரிமையாளர்கள் தொடர் நஷ்டத்தை கண்டு கவலையடைந்து வருகின்றனர். இதனால் சிலர் கோழி வளர்ப்பை கைவிடும் நிலைக்கு வந்துள்ளனர்.இதுகுறித்து கோழி வளர்ப்போர்கள் கூறியதாவது:நாங்கள் சில மாதங்களாக கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது பெய்த மழையின் காரணமாக கோழிகள் செய்து மடிகிறது. எதனால் இறக்கிறது என்று தெரிவியவில்லை. மர்ம நோய்கள் ஏதும் பரவுகிறதா என்று தெரியவில்லை. தற்போது பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். இதற்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு தகுந்த நடடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

Tags : loss ,farms ,
× RELATED வால்பாறையில் அட்டகாசம்: கோழிகளை விரட்டி பிடித்து வேட்டையாடிய சிறுத்தை