×

தொடர் மழை எதிரொலி காய்கறி வரத்து குறைந்ததால் விலை உயர்வு

திருப்பூர், நவ.5:திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் காயகறி செடிகளில் பூக்கள் உதிர்ந்து எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் ஏழை, எளிய பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் தெற்கு உழவர் சந்தை, தினசரி மொத்த காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. திருப்பூர், கோவில் வழி, அருள்புரம், நல்லுார், செவந்தபாளையம், அல்லாலபுரம், நொச்சிபாளையம், மங்கலம்,  அணைப்பாளையம், முதலிபாளையம் உட்பட நுாற்றுக்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து  விவசாயிகள் தங்களுடைய  விளைநிலங்களிலுள்ள காய்கறிகளை அறுவடை செய்து திருப்பூர் உழவர் சந்தை, மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

மொத்த காய்கறி சந்தைக்கு தினமும் 40 ஆயிரம் டன் முதல் 50 ஆயிரம் டன் காய்கறிகள் வரத்து உள்ளது. தென்னம்பாளையம் மொத்த காய்கறி சந்தையில் உள்ளூர் விற்பனை போக ஒட்டன்சத்திரம் மொத்த காய்கறி சந்தைக்கும், கேரளாவிற்கு அதிகளவு காய்கறிகள் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் தினமும் அனுப்பப்படுகிறது. திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்ந்து வருவதால் காய்கறி செடிகளில் உள்ள பூ உதிர்ந்து எதிர்பார்த்த விளைச்சல் இல்லை.  

இதனால், உழவர் சந்தை மற்றும் மொத்த காய்கறி சந்தைகளில் காய்கறிகள் வரத்து கடந்த சில நாட்களாக 30 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், காய்கறி விளைச்சல் விவசாயிகளுக்கு குறைவாக கிடைத்துள்ளதால் முட்டுவலிச்செலவுக்குகூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தக்காளி ரூ.30 ம், கத்திரி ரூ.110  (பவானி) வெண்டை ரூ. 40, புடலை ரூ.40, பீர்க்கன் ரூ.50, சுரைக்காய் ரூ. 15, அவரை ரூ.60, கொத்தவரை- ரூ. 40, பாகல் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ. 60-70 என காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகளிலிலேயே விலை அதிகரித்துள்ளதால் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் ஏழை, எளிய பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : rainfall ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில்...