×

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காந்தியின் கொள்கைகளை எடுத்துரைத்த முதியவர்

கோவை, நவ. 5:  கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த முதியவர் ஒருவர் காந்தியின் கொள்கைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். கோவை சரவணம்பட்டியை சேர்ந்த அவரது பெயர் தங்கவேலு (வயது 72). சிறு வயதிலேயே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், அகிம்சை குறித்து மாணவர்களுக்கு போதித்து வருகிறார். இது குறித்து தங்கவேலு நிருபர்களிடம் கூறியதாவது:- நான் நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு பிறந்தேன். இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்து காப்பாற்றிய காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். இதைத்தொடர்ந்து கடந்த 1969-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் இடையே காந்தியின் அகிம்சை குறித்து எடுத்து கூறி வருகிறேன்.

ஆரம்பத்தில் பாத யாத்திரையாக சென்று பொதுமக்களுக்கு அகிம்சையை போதித்தேன். தற்போது வயதாகி விட்டதால் இரு சக்கர வாகனத்தில் சென்று போதனை செய்து வருகிறேன். நாட்டை காப்பாற்றிய காந்திக்கு கோயில் கட்ட முடிவு செய்தேன். இதையடுத்து சரவணம்பட்டியில் உள்ள எனது வீட்டிற்கு அருகிலேயே கடந்த 1993-ம் ஆண்டு காந்திக்கு கோயில் கட்டி சிலை வைத்தேன். அங்கு தினமும் காந்தி சிலைக்கு கற்பூரம் கொளுத்தி வழிபாடு செய்கிறேன். இந்த ஆண்டு காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வன்முறைகள் தற்போது அதிகரித்து வருகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவ-மாணவிகள் இடையே காந்தியின் அகிம்சை குறித்து எடுத்து கூறி வருகிறேன். காந்திய கொள்கைகளை பின்பற்றினால்தான் வன்முறையற்ற சமுதாயம் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Gandhi ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...