×

தனியார் சந்தைகளால் வரி ஏய்ப்பு தடை செய்ய வணிகர்கள் கோரிக்கை

கோவை, நவ. 5: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர், மக்கள் ஆகியோர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
மதிமுக பீளமேடு பகுதிச்செயலாளர் வெள்ளியங்கிரி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பீளமேடு அவினாசி ரோட்டிற்கு அருகாமையில் உள்ள பயனீர் மில் ரோட்டில் ஆரம்ப சுகாதார மையம் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் செயல்பட கூடிய புற நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை, 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய பிரசவ அறை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். இந்து முன்னணி கோவை மாவட்ட தலைவர் தசரதன் மனுவில் கூறியுள்ளதாவது: சமீபத்தில் தமிழக அரசு ஆலய நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கிற்காக தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூல பத்திரத்திலும் மேற்கண்டவாறே கூறியுள்ளது. இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தை திரும்பப் பெறவேண்டும்.

தமிழ்புலிகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது : டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தரவேண்டும். டெங்கு பரவாமல் தடுக்கவும், தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேக்கி வைத்து சுகாதாரத்தின் மீது அலட்சியம் காட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மாநகராட்சி முழுவதும் கொசு மருத்து அடிக்க வேண்டும். கோவை மாவட்ட சுதேசிய வணிகர் சங்கம் தலைவர் லிங்கம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 41வது வார்டு பாலமுருகன் நகரில் உள்ள சந்தை மற்றும் 45வது வார்டு ராஜீவ்காந்தி சாலையில் உள்ள புதியதாக ஆரம்பிக்கப்பட்ட சந்தைகளை ஆரம்ப நிலையிலே தடை செய்ய வேண்டும். அரசு விதிகளை பின்பற்றாமல் சிறு வியாபாரிகள் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி சந்தைகளை நடத்தி தனிநபர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். சிறு வணிகம் காப்பாற்றப்பட தனியார் சந்தைகளை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Merchants ,tax evasion ,
× RELATED தர்மபுரியில் புளி வணிகர்கள் நலச்சங்க வெள்ளி விழா