×

திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அம்மன் கோயிலில் நாக சதுர்த்தி விழா

திருவள்ளூர், நவ. 1: நாக சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாம்பு புற்றிற்கு பால், முட்டை ஊற்றி பெண்கள் குடும்பத்துடன் வழிபட்டனர். தீபாவளி முடிந்த ஐந்தாம் நாளில் அம்மன் கோயில்கள் மற்றும் புற்றுக் கோயில்களில் நாகசதுர்த்தி விழா  நடைபெறுவது வழக்கம். நேற்று நாக சதுர்த்தி என்பதால் திருவள்ளூர் மூங்காத்தம்மன் கோயில் வளாகத்தில் உள்ள புற்றுக்கோயிலில் பெண் பக்தர்கள் மஞ்சள், குங்குமமிட்டு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து புற்றுக்கு பால் ஊற்றி,  முட்டை வைத்து வழிபட்டனர். இதேபோல் ராஜாஜிபுரம் பவானி அம்மன் கோயில் தீர்த்தீஸ்வரர் கோயில், ஜெயா நகர் வல்லப விநாயகர் கோயில், வேம்புலியம்மன் கோயில், கோலம் கொண்ட அம்மன் கோயில், திரவுபதி அம்மன் கோயில்,  புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், திருப்பாச்சூர் செல்லியம்மன் கோயில், பேரம்பாக்கம் அங்காளம்மன் கோயில், அரண்வாயல் பூங்காவனத்தம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் மற்றும் புற்று கோயில்களில் நாக சதுர்த்தி  விழா நடந்தது. அனைத்து அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் நாக சதுர்த்தி விழாவையொட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ நாகவல்லி அம்மன் கோயிலில் விநாயகர், முருகர், நாகவல்லியம்மன், நவகிரகங்கள் ஆகிய சுவாமிகளுக்கு கோயில் குருக்கள் சுரேந்தர்  பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்தார். பின்னர் அம்மனுக்கு வெள்ளி கவசம் அனுவிக்கப்பட்டு மஹா தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் ரெட்டி தெரு, நேரு  பஜார், திருவள்ளூர் சாலை, சத்தியவேடு சாலை என பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கோயில் வளாகத்தில் உள்ள புற்றில் பால் ஊற்றி, புடவைகளை சார்த்தியும், கம்பு, எள்ளு, மாவிளக்கு போட்டு, தேங்காய் உடைத்து  நேர்த்திக்கடனை செலுத்தினர். இதே போல் நாகலாபுரம் சாலையில் போக்குவரத்து பனிமனை அருகே உள்ள ஸ்ரீ நாகவல்லி அம்மன் கோயிலிலும், சிறப்பு பூஜைகளை கோயில் குருக்கள் குமார் செய்தார். இங்கு பெண்கள் புற்றில் பால் ஊற்றி,  புடவைகளை சார்த்தி வழிபட்டனர்.

Tags : Naga Chaturthi Festival ,Amman Temple ,Thiruvallur ,
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை