×

மெஞ்ஞானபுரம் பகுதியில் உருக்குலைந்த சாலையால் விபத்து அபாயம்

உடன்குடி, அக். 31: மெஞ்ஞானபுரம் பகுதியில் பராமரிப்பின்றி உருக்குலைந்த சாலையால் விபத்து அபாயம் நிலவுகிறது.   மெஞ்ஞானபுரம் பஜாரில் இருந்து பரமன்குறிச்சி வரை சாலை போக்குவரத்துக்கு  லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதில் மெஞ்ஞானபுரம் பஜாரிலிருந்து பால்பண்ணை  வரை சாலை ஆண்டுகணக்கில் முறையான பராமரிப்பின்றி உருக்குலைந்துள்ளது. குறிப்பாக சாலையில் உருவான பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல முறை இதுகுறித்து  புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் சாலையை சரிசெய்ய  மறுக்கின்றனர். குறிப்பாக நெடுஞ்சாலைத்துறையினர், உருக்குலைந்த சாலையை நேரில் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொள்வதற்கு பதிலாக பெயரளவுக்கு சாலைப்பணியாளர்களை வைத்து கிரசர் துகளை பள்ளங்களில் நிரப்பிவிட்டு சென்று  விடுகின்றனர்.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் சென்று வரும் போது காற்றில்  தூசி கலந்து அந்த பகுதி பொதுமக்கள் ஆஸ்துமா மற்றும் அலர்ஜியால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பெய்த மழையில் கிரசர் துகள்கள்  மழை நீரில் அடித்து செல்லப்பட்டு சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள்  செல்லமுடியாமல் தடுமாறி செல்கிறது. மேலும் சாலையின் கிடக்கும் பள்ளத்தில்  இருசக்கர வாகனங்கள் விழுந்து எழும் நிலையுள்ளது. இதனிடையே உருக்குலைந்த சாலையில் உருவான பள்ளங்களில் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் நாட்கணக்கில் தேங்கிநிற்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாக அவதிப்படுகின்றனர். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்கவும், புதிதாக தார்ச் சாலை அமைக்கவும் வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : Road accident ,Manganapuram ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு