×

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சிவகங்கை, அக். 31: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் தொடர் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் இருந்து மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டும் கனமழையும், மற்ற பகுதிகளில் லேசான மழையும் பெய்தது. செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் மீண்டும் மழை பெய்தது. அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது. தீபாவளிக்கு சில நாட்கள் முன் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை கனமழை பெய்த நிலையில் காலை 8 மணிக்கு மேல் சுமார் ஒரு மணி நேரம் வெயில் அடித்தது. பின்னர் மீண்டும் 9 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மழையால் நகர்ப்பகுதிகள், சாலைகளில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக சிவகங்கையில் 41.2மி.மீ மழை பதிவானது. திருப்பத்தூரில் 39மி.மீ, மானாமதுரையில் 39மி.மீ, காளையார்கோவிலில் 32.8மி.மீ, திருப்புவனத்தில் 32.6மி.மீ, தேவகோட்டையில் 30.4மி.மீ, சிங்கம்புணரியில் 28.2.மி.மீ, காரைக்குடியில் 24.6மி.மீ, மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: இந்த ஆண்டு தான் நீண்ட காலத்திற்கு பிறகு பகல் நேரத்தில் மழை பெய்து வருகிறது. தற்போது கன மழையும் பெய்வதால் குளங்கள், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை குடிநீர் பிரச்னை வராமல் தடுக்கப்படும் என்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ‘இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை நம்பிக்கை தரும் வகையில் இருந்தது. இதனால் விவசாய பணிகளை தொடங்கினோம். தற்போது வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து சில நாட்கள் கனமழை பெய்தால் விவசாய பணிகளுக்கு உதவும்’ என்றனர்.

Tags : Sivaganga District ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...