×

சிவகங்கை மாவட்டத்தில் ஆள் விழுங்க காத்திருக்கும் ஆழ்துளை கிணறுகள் மூடப்படுமா?

சிவகங்கை, அக். 31: சிவகங்கை மாவட்டத்தில் அரசு சார்பில் போடப்பட்டு பயனில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அனைத்து நீர் நிலைகளும் நிறைந்து காணப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் கடும் வறட்சி, அதிகப்படியான வெப்பத்தால் இருக்கும் மழைநீரும் விரைவாகவே வற்றியது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து இடங்களிலும் ஆழ்துளை கிணறு அமைத்து சிறு மின்விசை பம்பு வைக்கப்படுகிறது. ஒரே தெருவில் இரண்டு, மூன்று ஆழ்துளை கிணறுகள் கூட அமைக்கின்றனர். சுத்திகரிப்பு உபகரணங்களுடன் இல்லாமல் இவைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆழ்குழாய்கள் நீர் இல்லாததால் பயன்பாடில்லாமல் உள்ளன. இங்கு காணப்பட்ட மோட்டார்களையும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் கழற்றி சென்றுவிட்டனர். இதனால் இந்த ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளன. பல இடங்களில் மேலே பொருத்தப்பட்ட பைப்புகளுடன் உள்ளன. வயல், கண்மாய் பகுதிகளில் அமைக்கப்பட்டு நீர் இல்லாமல் விடப்பட்ட கிணறுகள் பைப் பொருத்தப்படாமல் அப்படியே மண்ணில் குழியுடன் காட்சியளிக்கிறது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் இறந்ததையடுத்து ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்க வேண்டும். அவ்வாறு மாற்ற வாய்ப்பில்லாத கிணறுகளை மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதி ஒருவர் கூறியதாவது, ‘பல இடங்களில் நீர் வராத ஆழ்குழாய்களில் இருந்து மோட்டாரை கழற்றி சென்றுவிட்டனர். இதனால் அவைகள் மூடப்படாமல் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. இவைகளை மூடவோ அல்லது மாற்று ஏற்பாடு செய்யவோ, அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்’

Tags : wells ,Sivagangai district ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி