×

தொடர் மழையால் கன்னங்குறிச்சி புது ஏரி நிரம்பியது

சேலம், அக். 31: சேலத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கன்னங்குறிச்சி புது ஏரி நிரம்பியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகாரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வருகிறது. ஏற்காடு மழையிலும் தொடர்ந்து பெய்து வரும்  மழையினால், மலைப்பாதைகளில் பல இடங்களில் திடீர் நீர்வீழ்ச்சி தோன்றியுள்ளது. மழையினால், ஏற்காடு மஞ்சகுட்டை பகுதிகளில் இருக்கும் எஸ்டேட் பகுதிகளிலும் மழைநீர், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடிகிறது.

இந்த மழைநீர் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள புது ஏரிக்கு வந்து சேருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வறண்டு கிடந்த புது ஏரிக்கு தொடர் மழையின் காரணமாக, நீர்வரத்து அதிகரித்து, இதனால் தற்போது புதுஏரி நிரம்பியது.  ஏரி நிரம்பி வழிந்து தண்ணீர் செல்கிறது.  இதை பார்க்க அப்பகுதி பொதுமக்கள் கன்னங்குறிச்சி புதுஏரிக்கு வந்து ஏரியின் அழகை ரசித்து செல்கிறார்கள். ஏரியையொட்டி, வசிக்கும் விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், புது ஏரியில் இன்னும் ஒரு சில நாட்களில் மீன் குஞ்சுகள் விட விவசாயிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘புது ஏரி நிரம்பியதை தொடர்ந்து, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். தற்போது மீன்குஞ்சுகள் விடப்படுகிறது. கட்லா, ரோகு உள்ளிட்ட மீன் வகைகளின் குஞ்சுகளை ஆந்திராவில் விலைக்கு வாங்கி வந்து ஏரியில் விட நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். 6 மாதத்திற்குள் மீன் குஞ்சுகள் பெரிதாகிவிடும்’’ என்றனர்.

Tags : Kannangurichi New Lake ,
× RELATED கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் ஆயுதங்களுடன் கைது