×

6வது நாளாக வேலை நிறுத்தம் அரசு மருத்துவமனையில் 150 ஆபரேஷன்கள் நிறுத்தம்

நாமக்கல், அக்.31: அரசு மருத்துவர்கள் 6வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பதால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் 150 ஆபரேஷன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், டாக்டர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 25ம் தேதி முதல் நாமக்கல் மாவட்டத்தில்  அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 6வது நாளாக நீடித்தது. நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு டாக்டர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில், காய்ச்சலுக்கு கூட பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாத நிலை நிலவுகிறது. பணிக்கு வரும் சில டாக்டர்களை வைத்து, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் காய்ச்சல் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவனையில் மொத்தம் உள்ள 65 டாக்டர்களில், 40 டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தினமும் நடைபெறும் கண் அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அறுவை சிகிச்சை அரங்குகள் டாக்டர்கள், நர்ஸ்கள்   இன்றி காட்சி அளிக்கிறது. டாக்டர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 6 நாட்களாக, 150 ஆபரேஷன்கள் அரசு மருத்துவமனையில் நடைபெறவில்லை. இதனால் அந்த நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர் என டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Strike ,operators ,Government Hospital ,
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...