×

லவ்டேல் பகுதி சாலையில் ராட்சத கற்பூர மரங்களால் விபத்து அபாயம்

ஊட்டி, அக்.31: ஊட்டி - மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் இரு புறங்களில் வளர்ந்துள்ள ராட்சத மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களிலும், கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலை ஓரங்களிலும் ராட்சத கற்பூர மரங்கள் உள்ளன. குறிப்பாக, ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் லவ்டேல் சந்திப்பில் இருந்து காந்திப்பேட்டை வரையில் சாலையின் இரு புறங்களிலும் பல ஆயிரம் கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன. இதில், லவ்டேல் பகுதியில் உள்ள மரங்கள் அனைத்தும் லாரன்ஸ் பள்ளிக்கு சொந்தமானது. காந்திப்பேட்டை முதல் தாம்பட்டி சந்திப்பு வரையுள்ள மரங்கள் வனத்துறைக்கு சொந்தமானது.

ஆண்டு தோறும் பருவமழையின்போது, இந்த மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதப்பது மட்டுமின்றி, சில சமயங்களில் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. கடந்த இரு ஆண்டுக்கு முன் இச்சாலையில் நுந்தளா பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று அரசு பஸ்சின் மீது விழுந்ததில் வடமாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பலியானார். எனவே, சாலையோரங்களில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். ஆனால் மரங்கள் அகற்றுவதில் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. மேலும், தற்போது ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் மரங்கள் சாய்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதில், பல மரங்கள் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் உள்ளன. இவைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தால், மழைக் காலங்களில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கலாம். அதேபோல், போக்குவரத்து தடை ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

Tags : accident ,area road ,Lovedale ,
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...