×

கோவை மாநகரில் மழையால் சாலைகள் சேதம்

கோவை, அக். 31: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்துள்ளது. மேலும், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மழையின் காரணமாக கோவை மாநகரின் சாலைகளில் பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சாலைகள் கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது. உக்கடம் மேம்பால பணியின் காரணமாக கனரக வாகனங்கள், பேருந்துகள் புட்டுவிக்கி சாலை வழியாக செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமீபத்திய மழையினால் சுண்டக்காமுத்தூர் சாலையில் இருந்து புட்டுவிக்கி வரை 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய மற்றும் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதில், புட்டுவிக்கி பாலத்தையொட்டி, மெகா பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் 50மீ வரை சாலை கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பெரிய அளவிலான பள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மழையால் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் அல்லது புதிய சாலையை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Roads ,city ,Coimbatore ,
× RELATED போலீஸ் பாதுகாப்புக்காக பொய் புகார் இந்து முன்னணி பிரமுகர் கைது